மலேஷியாவில் விசா பிரச்சனையால் தவிக்கும் தமிழக மக்களை மீட்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நாகை எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ''வணிகம் மற்றும் சுற்றுலா நிமித்தமாக மலேஷியாவுக்கு குறுகிய கால பயணம் மேற்கொண்ட தமிழர்கள், திடீர் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, விசா நீட்டிப்பும் பெற முடியாமல் உள்ளனர்.
அவர்களில் அநேகர் நாடு திரும்ப உரிய விசா மற்றும் விமான டிக்கெட் முன் பதிவு செய்திருந்தவர்கள் ஆவர். மலேஷிய காவல்துறையினர் அவர்களில் இருநூறுக்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.
அவர்களின் நிலையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அவர்களை பாதுகாக்கவும், விமான சேவைகள் தொடங்கும் வரை பாதுகாப்பாக தங்க வைக்கவும், தமிழக அரசின் சார்பில் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அன்புடன் தங்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகத்திடமும், செல்போனில் இதுகுறித்து பேசி நிலைமையை விளக்கியுள்ளார் தமிமுன் அன்சாரி. மேலும், மலேஷியாவில் இருக்கும் 'கிம்மா' கட்சியின் தலைவர் டத்தோ செய்யது இப்ராகிம் அவர்களிடம் பேசி, அங்குள்ள தமிழக பயணிகளுக்கு உரிய சட்ட உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
அங்கு மனித நேய கலாச்சாரப் பேரவையினர் மலேஷிய அமைச்சர் டத்தோ.சரவணனிடம் இது குறித்து முறையிட்டுள்ளனர். தற்போது அங்கு தங்கியிருக்கும் மஜக பொருளாளர் ஹாரூன் ரஷீது, அங்குள்ள தமிழக பயணிகளுடன் தொடர்பில் இருந்து ஒருங்கிணைத்து வருகிறார்.
அவர்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை செய்து தமிமுன் அன்சாரி, அந்நாட்டின் தொழிலதிபர்களில் ஒருவரும், சமூக ஆர்வலருமான டத்தோ.அப்துல் அஜீஸ் (சுபைதா குழுமம்) அவர்களிடமும், பிரபல சமூக செயல்பாட்டாளர் திருவாட்டி. ஃபாத்திமா அவர்களிடமும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.