சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலத்திற்கு இன்று (24/05/2022) காலை வருகை தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு உயரதிகாரிகள், அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஓமலூர் விமான நிலையத்தில், சேலம் மாநகராட்சி மேயர், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், கட்சியின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, சாலை மார்க்கமாக கார் மூலம் மேட்டூர் அணைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோர் சால்வை அணிவித்தனர். பின்னர், குறுவைச் சாகுபடிக்காக முதலமைச்சர் அணையைத் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் பாதாளத்திற்குச் சென்றிருந்தது. 10 ஆண்டுகளாக முடங்கிக்கிடந்த தமிழ்நாடு தற்பொழுது புத்துணர்ச்சி பெற்றுள்ளது. தரையில் ஊர்ந்து கொண்டிருந்த தமிழ்நாடு நெஞ்சை நிமிர்த்தி நிற்க தொடங்கியுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் தங்களின் விருப்பப்படி தண்ணீரை திறந்துவிட்டனர். திமுக ஆட்சியில் இறக்கையே ஆதரவு தரும் வகையில் மழை பொழிகிறது. மேட்டூர் அணை திறப்பால் 5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதிபெறும். கடந்த அதிமுக ஆட்சியில் ஒரே ஒரு முறைதான் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
திமுக ஆட்சியின் ஓராண்டு காலம் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. அனைத்து வளங்களையும் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உருவாகும். 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான திருக்கோவில்களுடைய சொத்துக்கள் திமுக ஆட்சியில்தான் மீட்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளோம். கோவிலில் பணியாற்றும் அனைவருக்கும் 4 ஆயிரம் ரூபாய் பணமும் அரிசி, பருப்பு என மளிகை பொருட்கள் கொடுத்துள்ளோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் திமுக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டிருக்கிறது. கோவில்களில் அன்னைத்தமிழில் வழிபாடு நடத்த உத்தரவிட்டுள்ளோம். 12 இறைவன் போற்றி பாடல் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அறநிலையத்துறை சார்பில் 10 கலைக்கல்லூரிகள் உருவாக்கப்போகிறோம்.
இவை இந்து சமய அறநிலையத்துறையால் கடந்த ஓராண்டு காலத்தில் செய்யப்பட்டுள்ள பணிகள், சாதனைகள். உண்மையான ஆன்மீகவாதிகள் நீங்கள் என்றால் இதை ஆதரித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக மதத்தை வைத்து அரசியல் செய்து மதவெறியை தூண்டும் வகையில் இருப்பவர்கள் இதை திசை திருப்புகிறார்கள். பொய்யான அவதூறுகளை சொல்லி ஆட்சியின் மீது அவதூறுகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அவதூறுகளை நான் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. 'வாழ்க வசவாளர்கள்' என அண்ணா சொன்னதன்படி என் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன். யாருக்கும் பதில்சொல்லி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவே எனக்கு நேரம் பத்தல, அவர்களுக்கு பதில் சொல்ல எனக்கு எங்க நேரம் இருக்கு. திராவிட மாடல் யாரையும் பிரிக்காது, ஒன்று சேர்க்கும். இது ஒரு கட்சியின் அரசல்ல ஒரு இனத்தின் அரசு. திராவிட மாடல் யாரையும் இடிக்காது,உருவாக்கும். யாரையும் புறக்கணிக்காது அரவணைக்கும். திமுக கொடுத்த வாக்குறுதிகளை மக்கள் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். தமிழக மக்களுக்காக எனது சக்திக்கு மீறியும் உழைப்பேன். மாநில அரசின் முழு வரியையும் ஒன்றிய அரசு சுரண்டி தின்றுவிட்டது. பெட்ரோல், டீசல் விலையை பன்மடங்கு உயர்த்திவிட்டு தற்பொழுது சிறிது குறைந்துள்ளார்கள். ஒன்றிய அரசு வழங்க வேண்டிய 21,760 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை இன்னும் வழங்கவில்லை'' என்றார்.