தமிழகத்தில் எத்தனை தேர்தல் நடந்தாலும் திராவிட கட்சிகள் தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தேசிய கட்சிகளுக்கு இங்கு இடமில்லை என்று அதிமுக மூத்த தலைவரும், நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை கூறியிருந்தார்.
இதுகுறித்து நக்கீரன் இணையதளத்திடம் பேசிய பாஜகவின் நாராயணன்,
தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அது அவர்களுடைய ஆசை. விருப்பம். யார் ஆட்சி செய்வார்கள். யார் ஆட்சி செய்ய மாட்டார்கள் என்று மக்கள்தான் முடிவு செய்வார்கள். தமிழகம் ஒரு மாற்றத்தை விரும்பியிருக்கிறது.
கடந்த 40 வருடங்களுக்கு மேலாக ஒரு ஆளுமையின் கீழேதான் இங்கு கட்சிகள் இயங்கி வந்தது. இதனை கண்கூடாக பார்த்திருக்கிறோம். திமுக தலைவர் கலைஞர், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற ஆளுமையைத்தான் மக்கள் விரும்பியிருந்தார்கள். இதுதான் உண்மை. ஜெயலலிதா மறைந்ததும், கலைஞர் அவர்கள் தனது வயது மூப்பின் காரணமாக அரசியலில் ஓதுங்கியதும் தமிழகத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆகவே அந்தக் கட்சிகளை வழிநடத்தக்கூடிய தலைவர்கள் இல்லை. ஆட்சியையும் சிறப்பாக நடத்தக்கூடியவர்கள் இல்லை. ஆகையால் ஒரு கட்சியின் நல்ல நிர்வாகத்திறனை கண்டு மக்கள் வாக்களிப்பார்கள். கடந்த 4 வருடங்களாக மத்தியில் சிறப்பான நிர்வாகத்தை கொடுத்திருக்கக்கூடிய பாஜக அரசை தமிழக மக்கள் ஆதரிப்பார்கள். பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும். இவ்வாறு கூறினார்.