மத்திய அமைச்சரவையிலிருந்து முக்தர் அப்பாஸ் நக்வி மற்றும் ஆர்.சி.பி சிங் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
மோடி தலைமையிலான அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக முக்தர் அப்பாஸ் நக்வி செயல்பட்டு வந்த நிலையில் தற்பொழுது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 6- ஆம் தேதி அன்று குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக முக்தர் அப்பாஸ் நக்வி இந்தியத் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்பொழுது முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ளார்.
அதேபோல் மத்திய அமைச்சரவையிலிருந்து ஆர்.சி.பி.சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய உருக்குத்துறை அமைச்சராக இருந்த ஆர்.சி.பி.சிங்கின் மாநிலங்களவை எம்பி பதவி காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில் இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.