சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான தாயகத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. தலைமையில் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் நேற்று (20/10/2021) நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கட்சியில் துரை வையாபுரிக்குப் பொறுப்பு வழங்குவது, கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கட்சியின் மாவட்டச் செயலாளர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., "ம.தி.மு.க.வின் தலைமைக் கழக செயலாளராகத் துரை வையாபுரி நியமிக்கப்பட்டுள்ளார். 106 வாக்குகளில் துரை வையாபுரிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என 104 வாக்குகள் கிடைத்துள்ளன. துரை வையாபுரி நியமனத்தில் வாரிசு அரசியல் இல்லை. தொண்டர்கள் விருப்பப்படி துரை வையாபுரி ம.தி.மு.க. தலைமைக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். துரை வையாபுரி மக்கள் பணியாற்றினார்; அதனால் நிர்வாகிகள் அவரை கட்சிப் பணியாற்ற அழைத்தனர்'' எனத் தெரிவித்தார்.
ம.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளராக துரை வையாபுரி பொறுப்பேற்ற நிலையில் மதிமுகவில் இருந்து அக்கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் வே.ஈஸ்வரன் பதவி விலகியுள்ளார். மேலும் ''எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது'' எனவும் கருத்து தெரிவித்துள்ளார் கோவையை சேர்ந்த வே.ஈஸ்வரன்.