நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் நடைபெற்றது. இதனையொட்டி மாலை 4 மணிக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். அப்போது மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருந்த ராம்ப் வாக் மேடையில் ராம்ப் வாக் சென்றார். அப்போது அங்கிருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள், ‘தளபதி, தளபதி’ என முழக்கமிட்டு உற்சாகப்படுத்தி வரவேற்பு அளித்தனர். அப்போது தொண்டர்கள் அவரை நோக்கி வீசிய அக்கட்சியின் துண்டை வாங்கி தோளில் அணிந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாமன்னர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். அதன் தொடர்ச்சியாக மாநாட்டு நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள 100 அடி கொடிக் கம்பத்தில் அக்கட்சியின் கொடியை விஜய் ஏற்றினார். பின்னணியில் கட்சியின் பாடல் இசைக்க லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சி ததும்ப த.வெ.க கொடியை விஜய் ஏற்றி வைத்தார். இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசுகையில், “உலக இலக்கியம், உலக கோட்பாடுகள் என்று சொல்லிக்கொண்டு ஆடியோவை ஆன் பண்ணிவிட்டுப் பேசப்போவதுமில்லை. ஏற்கனவே இருக்கின்ற அரசியல்வாதிகளைப் பற்றி பேச போவதில்லை. அது போன்று நடிக்கப் போவதுமில்லை, அதற்காக மொத்தமாகக் கண்ணை மூடிக்கொண்டு இருக்கப் போவதும் இல்லை.
இப்போ என்ன தேவை. இப்ப என்ன பிரச்சனை. அதற்கு என்ன தீர்வு. இதைத் தெளிவாக மக்களிடம் எடுத்துச் சொன்னாலே, அதனால் அவர்களுக்கு நம்மீது நம்பிக்கை வரும். அது மட்டும் இல்லாமல் அரசியலில் நம்பிக்கை தருவது கொள்கை கோட்பாடுகள் தான். அதை யாரிடமிருந்து எடுத்து எந்த பாதையில் பயன்படுத்தப் போகிறோம் என்று மக்களிடம் தெளிவாகச் சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்ல வேண்டியது நம்முடைய கடமை. அப்படி ஒரு நம்முடைய கொள்கை தலைவர்கள் நாம் பின்பற்றப் போகும் தலைவர்கள், நம் நம்முடைய வழிகாட்டிகள் யார் யார் என்று சொல்ல போறோம்.
அவர்கள் வேறு யாருமில்லை. அவர்கள் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் தான். இந்த மண்ணுக்கு அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவர்கள் தான். அதனால்தான் இந்த மண்ணின் அடையாளமாகவும் மாறிப் போனவர்கள் தான். பகுத்தறிவு புரட்சியாளர் தந்தை பெரியார். என்ன தந்தை பெரியாரா என்று ஒரு கூட்டம் ஒரு கூச்சல் போடுகிறார்கள். பெருந்தலைவர் காமராஜர். இவர் நேர்மையான நிர்வாக செயல்பாட்டுக்கு முன்னுதாரணமாக இருந்தால் அவரும் எங்கள் வழிகாட்டி தான்.
இந்தியத் துணைக் கண்டத்திற்கு அரசியல் அமைப்பு சாசனத்தைக் கொடுத்தவரும், சாதிய ஒடுக்குமுறைக்காகப் போராடியவருமான அண்ணல் அம்பேத்கர். இந்த பெயரைக் கேட்டாலே சமூகத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுத்துபவர்களே நடுங்கிப் போய் விடுவார்கள். வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்தையும் சாதியை ஒடுக்கு முறையையும் நிலை நிறுத்த போராடி மாபெரும் தலைவரை வழிகாட்டியாகக் கொள்வதற்குப் பெருமை கொள்கிறோம். பெண்களைக் கொள்கை தலைவர்களாகக் கொண்ட அரசியல் களத்தில் வரும் முதல் கட்சியாகத் தமிழக வெற்றி கழகம் உருவாகியுள்ளது.
ஆகப்பெரும் வீராங்கனை, இந்த மண்ணைக் காட்டி அண்ட பேரரசி வீரமங்கை வேலுநாச்சியார். சொந்த வாழ்க்கையின் சோகத்தைக் கூட மறந்துவிட்டு இந்த மண்ணுக்காக வாழ்ந்ததையும், போர்க்களம் கண்டு, ஆண்களைக் காட்டிலும் பெண்ணாக உயரம் காட்டிய புரட்சியாளர் தான் வேலுநாச்சியார். மற்றொருவர், முன்னேறத் துடிக்கின்ற சமூகத்தில் பிறந்து இந்த மண் பின் தங்கி விடக்கூடாது என்பதற்காகப் பாடுபட்ட அஞ்சலை அம்மாள். இது போன்ற கொள்கை தலைவர்களை நிறுத்தி அரசியலில் வேகமாகவும், விவேகமாகவும் செயல்படுவது தான் முக்கியம். சொல் அல்ல செயல் தான் முக்கியம். அரசியல் போரில் கொள்கை, கோட்பாடுகளில் சமரசத்திற்கோ, சண்டை நிறுத்ததிற்கோ எப்போதும் இடம் இல்லை. வெறுப்பு அரசியலை எப்போதும் கையில் எடுக்கப் போவதில்லை. எதை நினைத்து அரசியல் வந்திருக்கிறோமோ, அதை நினைத்தது கொஞ்சம் கூட பிசிரல்லாமல் செய்து முடிப்போம். அதுவரைக்கும் நெருப்பாகத் தான் இருப்போம்” எனப் பேசினார்.