Skip to main content

“பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது” - த.வெ.க தலைவர் விஜய்

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
T.V.K. leader Vijay condolence amstrong incident

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்து வந்த ஆம்ஸ்ட்ராங்கை நேற்று (06-07-24) அவரதுவீட்டின் அருகே இருசக்கர வாகனங்களில் 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தப்பியோடிய மர்ம கும்பலைத் தேடி வந்தனர். 

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அவரது வீட்டின் அருகே 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களைப் போல் உடை அணிந்து கொண்டு வந்த மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது. இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். சரண் அடைந்த ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

T.V.K. leader Vijay condolence amstrong incident

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ஆம்ஸ்ட்ராங்கை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்