இன்று சட்டப்பேரவையில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அறிக்கையில், “ஸ்டெர்லைட் கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவறிவிட்டனர் மேலும் அவர்களிடம் ஒருங்கிணைப்பு இல்லை. ஓடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. போராட்டக்காரர்கள் 5 பேர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டுக்கு முன் எவ்வித எச்சரிக்கையும் விடப்படவில்லை. அப்போதைய காவல்துறை தலைவர் சைலேஷ்குமார் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள்ளேயே இருந்திருந்தும், அப்போதைய காவல்துறை துணைத் தலைவர் அவராகவே அதிகாரத்தை கையிலெடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 10 லட்சமும் வழங்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.