5 மற்றும் 8- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எஸ்எஸ்எல்சி தேர்வுகளை நடத்தும் அரசுத்தேர்வுகள் இயக்ககம் நடத்துமா? அல்லது பள்ளிக்கல்வித்துறையே நடத்துமா? என உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் லூயிஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். தமிழக அரசு 5 மற்றும் 8- ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி திட்டத்திற்கு இது முற்றிலும் எதிராக உள்ளது. கல்வி திட்டத்தை பொறுத்தவரையில் 8- ஆம் வகுப்பு வரை மாணவர்களை தேர்ச்சி பெற செய்து அனைவரும் சமமாக கல்வி பெற வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகும்.
ஆனால் இது அதற்கு எதிராக உள்ளது. மேலும் 5 மற்றும் 8வது படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் அவர்களுக்கு அடுத்தகட்டமாக அரசு என்ன செய்யப்போகிறது என்பது குறித்த ஒரு தெளிவான அறிவிப்பு இல்லை. எந்த மாநிலத்திலும் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இந்த முறை அமலில் இல்லை. எனவே இம்முறை நடைபெறவுள்ள 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அந்த வழக்கில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் 5, 8 பொதுதேர்வு -தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை என்ன? என்ற கேள்விக்கு பதில் கூறும் வகையில் நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இது என்ன கேள்வி. அவங்க டைரக்டா நீட் எழுதி டாக்டராகவோ எஞ்சினீராவோ ஆயிடுவாங்க. ஒழுங்கா திறமையா சொல்லிக்குடுக்கிற ஆசிரியர்கள் இருந்தா பசங்க ஏன் பெயில் ஆகப்போராங்க⁉️ தனியார் பள்ளிகளில் இந்த பிரச்சினை இல்லயே. 100% ரிசல்ட் வருதில்ல. இங்க ஸிஸ்டம் சரியில்லயா. என்று சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பதில் கூறியுள்ளார். இதற்கு சமூக வலைத்தளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.