Skip to main content

“சசிகலாவின் இந்த நிலைக்கு டிடிவி தான் காரணம்” - திவாகரன் பேட்டி!

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

TTV is the whole reason for this situation of Sasikala

 

சசிகலா சிறை சென்றதற்கும், தற்போது அரசியலிருந்து வெளியே சென்றதற்கும் முழுமையான காரணம் டி.டிவி. தினகரன்தான் எனக் கடுகடுக்கிறார் திவாகரன். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளரும் வி.கே. சசிகலாவின் சகோதரருமான திவாகரன் அவரது கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். அதன் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திவாகரனிடம் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டது. 

 

ஜெயலலிதா, கலைஞர் என இருபெரும் தலைவர்கள் மறைவு, சசிகலா அரசியலில் இருந்து விலகல் என பல அதிரடிகளுக்கு இடையே நடக்கும் இந்த தேர்தல்குறித்து உங்கள் பார்வை ?


“இது ஜனநாயகத் திருவிழாவைப்போலத் தெரியவில்லை, கூட்டு வியாபாரத்திற்கு முயற்சி செய்யும் திருவிழாவாகத் தான் இருக்கிறது. ஏற்கனவே தமிழகம் 5 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது. இந்தச் சூழலில் இலவசங்களை ஆளும் கட்சியும், தற்போது ஆண்ட கட்சியும் தேர்தல் அறிக்கையாக அள்ளி வீசுகின்றன. அதே வேளையில், அதிமுக பல இக்கட்டான சூழலிலும் வேட்பாளர் தேர்வில் அதிகம் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். இதுவே, அவர்களின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.

 

இந்த தேர்தலில் அண்ணா திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது ?


“நாங்கள் யாருடனும் கூட்டணியில்லை. யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. தனித்து 'தொப்பி' சின்னத்தில் போட்டியிடுகிறோம். ஜெயலலிதா இருக்கும்போதே துணிந்து திமுகவை எதிர்த்து அரசியல் செய்தவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். அவங்களுக்குப் பாதுகாப்பு இல்லை, ஆனாலும் அவர்கள் இன்னும் அதிமுக தொண்டர்களாக தான் இன்னும் இருக்கிறார்கள். நாங்கள் முதற்கட்டமாக 17 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். இரண்டாம் கட்டப் பட்டியலை விரைவில் வெளியிடுவோம்.

 

TTV is the whole reason for this situation of Sasikala

 

சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லையா?


“சசிகலா ஒய்வு எடுப்பதாகக் கூறியிருப்பதை உள்ளபடியாக நான் வரவேற்கிறேன். சரியான நேரத்தில் பல சங்கதிகளைக் கூட்டிக்கழித்துப் பார்த்து தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார். ஆனால், இதில் சூழ்ச்சி உள்ளது. சசிகலா சிறை சென்றதற்கும், அரசியலிருந்து வெளியே சென்றதற்கும் முழுமையான காரணமே டி.டிவி தினகரன் தான். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை நான்தான் முதல்வராகத் தேர்வு செய்யச் சொன்னேன். அதன் படி செய்தார்கள்.

 

ஆனால் ஒரு சில நாட்களிலேயே தினகரன் பேச்சைகேட்டுக் கொண்டு முதல்வராக சசிகலா ஆசைப்பட்டார். அதன் விளைவாகத்தான் சிறைக்குச் சென்றார். ஜெயலலிதா உடன் இருந்ததிலிருந்தே சசிகலா கஷ்டத்தை தான் அனுபவித்து வருகிறார். எடப்பாடியை முதல்வராகக் கொண்டுவர கூவத்தூரில் பல நெருக்கடியைச் சந்தித்தவர் சசிகலா. மீண்டும் அம்மாவின் ஆட்சி தொடர பல பிரார்த்தனைகள் செய்தவர் சசிகலா. டி.டி.வி தினகரன் ‘நானே ராஜா நானே மந்திரி’ என நினைக்கிறார். சசிகலாவை மட்டம் தட்ட வேண்டும் எனப் பலர் நினைக்கிறார்கள். அது அரசியல் புரிதல் இல்லாமையே காரணம்.

 

அமமுகவில் முதல்வர் வேட்பாளர் நான்தான் என மூன்றாவது அணி அமைத்து டி,டி,வி தேர்தலில் களம் இறங்குவது குறித்து?


“தூங்குகிறவர்களை எழுப்பலாம், தூங்குகிற மாதிரி நடிக்கிறவர்களை எழுப்ப முடியாது. தான் முதல்வராக வரவேண்டும் என்று அமமுக கட்சியை உருவாக்கி அதில் அதிமுக தொண்டர்களை இணையச் சொன்னார் டிடிவி, இது பெரும் நகைச்சுவையாக உள்ளது. அதிமுக எவ்வளவு பெரிய கட்சி, எவ்வளவு பெரிய ஆட்களால் வளர்ந்த கட்சி, எத்தனை ஆண்டுகள் ஆட்சி பீடத்தில் இருந்த கட்சி, அந்த கட்சியை நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் மாதிரியான அமமுக கட்சியோடு இணைத்துக்கொள்வதாகக் கூறுவது என்பது எவ்வளவு புரிதல் அற்றது. இதன் மூலமாகத்தான் கட்சி உடைந்துபோனது. தினகரனின் கனவு பலிக்காது” என்கிறார்.

 

இனி, சசிகலா அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? 


“நிச்சயமாக சசிகலா அரசியலுக்கு வரமாட்டார். நானும் அவரை அரசியல் நிலைப்பாடு குறித்து சந்திக்க மாட்டேன். என்னை பலமுறை சசிகலா உதாசினப்படுத்தினார். பல துயரங்களைச் சந்தித்துவிட்டார். நான் சொல்வதை சசகிலா கேட்கவில்லை. ஜெயலலிதா மறைந்த பிறகு நான் சொன்னேன், உங்களைப் பொதுச்செயலாளர், முதல்வர் என ஆசைகாட்டி வலைவிரிப்பார்கள், நீங்க எந்தப் பொறுப்புக்கும் ஆசைப்படாத கிங் மேக்கராகவே இருக்கனும், என்றேன்.

 

அதோடு வயதான காலத்தில் அரசியலை விட்டுட்டு உங்க வீட்டுக்காரரோடு சேர்ந்து கடைசி காலத்தைக் கழிங்கன்னு சொன்னேன். அதையும் கேட்டுக்கல. அக்கா சசிகலாவும், அத்தான் நடராஜனும் சேர்ந்து வாழனும்னு அக்கா குடும்பத்திலோ, அத்தான் குடும்பத்திலோ யாரும் விரும்பல. ஓரே ஆள் நானும் என்னோட மகனும் தான் விரும்பினோம். இதுவரை நீங்க பட்ட துயரம் போதும், அரசியலை தூக்கிப்போட்டுட்டு சேர்ந்து வாழுங்கன்னு கண் கலங்கி சொன்னோம். அதையும் அவங்க கேட்கல, அதனால் எதற்காகவும் அவரைச் சந்திப்பதாக இல்லை” என்கிறார் திவாரகன்.

 

 


 

சார்ந்த செய்திகள்