தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும், அ.ம.மு.க.வின து.பொ.செ. டி.டி.வி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 7 பேர்கள் நேற்றிரவு இரண்டு கார்களில் நெல்லை மாவட்டம் குற்றாலத்திலுள்ள இசக்கி ரிசார்ட்டிற்கு வந்து தங்கனார்கள்.
இந்த ரிசார்ட் அ.ம.மு.க.வின் மாநில எம்.ஜி.ஆர். பேரவையின் இணைச் செயலாளரும் தினகரனின் ஆதரவாளருமான முன்னாள் அ.தி.மு.க.வான இசக்கிசுப்பையாவிற்குச் சொந்தமானது.
இந்நிலையில் இன்று காலையில் வாக்கிங் செல்வதற்காக தங்கத்தமிழ்செல்வன் வெளியே வந்தார். அப்போது தயார்நிலையில் நின்ற பத்திரிகையாளர்களிடம்,
''நேற்று முன்தினம் அம்மா முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தில் எங்களது துணை பொதுச்செயலாளர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது 18 எம்.எல்.ஏ.க்கள் பற்றிய வழக்கின் தீர்ப்பு எந்த நேரமும் வெளிவரலாம். இந்நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் இந்த அரசு எந்தவித அடிப்படை தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை. இதனை கண்டிக்கும் வகையில் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக அரசை கண்டிக்கும் வகையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி ஆண்டிப்பட்டியில் துவங்கி அனைத்து 18 சட்டமன்ற தொகுதிகளிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும், அந்த போராட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று நெல்லையில் தாமிரபரணி புஷ்கரம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் புனித நீராடவும் எனது தலைமையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 2 பேரையும் சேர்த்து 20 எம்.எல்.ஏ.க்கள் குற்றாலம் வந்துள்ளோம். இன்று காலையில் நாங்கள் திருநெல்வேலி சென்று புனித நீராடிவிட்டு மீண்டும் குற்றாலம் வருகிறோம். இன்று இரவும் இங்கு தங்கிவிட்டு நாளை ஊருக்கு திரும்புகிறோம். இதில் வேறு காரணங்கள் எதுவும் கிடையாது'' என்றார்.