திருச்சி மாவட்ட அமமுக தகவல் தொழில்நுட்ப மாநகர் மாவட்ட செயலாளர் எம்.கே.குமார் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று திருச்சிக்கு வந்த அமமுகவின் தலைவர் டி.டி.வி. தினகரன் தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "பதவி வெறியாலும், ஒரு சிலருடைய சுயநலத்தாலும், ஜெயலலிதாவின் இயக்கம் பலவீனமாகிக் கொண்டு இருக்கிறது. உண்மையான தொண்டர்கள் விரைவில் அதை மீட்டெடுப்போம். 12ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதும் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களில் பலர் ஐடிஐ, பாலிடெக்னிக் போன்ற படிப்புகளுக்குச் சென்றுவிட்டதால் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அத்துறையின் அமைச்சர் உரிய தகவல்களைச் சேமித்து புள்ளிவிவரத்துடன் கூற வேண்டும். பள்ளியின் இருந்து இடைநிற்றல்கள் அதிகமாக உள்ளது என்பதற்கான உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
அதிமுகவில் 1 லட்சம் பழனிசாமிகள் உள்ளனர் என்ற கருத்து கூறப்படுகிறது. அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள் இருக்கிறார்கள் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும். 2013 மன்மோகன் சிங் ஆட்சியில் ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஒருவர் பதவியில் இருக்கும்போது, தேர்தல் ஆணையத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட நபர் மேல்முறையீடு செய்து இறுதித்தீர்ப்பு வரும் வரை அவர் அதே பதவியில் நீடிக்கலாம் என்பதற்கு அன்று ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். இன்று அந்த சட்டத்திருத்தம் கொண்டு வந்திருந்தால் ராகுலுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. அன்று நிராகரித்தவர் இன்று அனுபவிக்கிறார்.
அமமுகவில் உள்ளவர்கள் கட்சி மாறுகிறார்கள். அதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு சிலர் தன்னுடைய சொந்தப் பிரச்சனைகளுக்காகவோ, பதவிக்காகவோ செல்கிறார்கள். ஆனால் அந்த இடத்திற்கு நல்ல தகுதியானவர்கள் உடனடியாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள்” என்றார்.