தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திருவாரூர் தொகுதியில் வெற்றிப் பெற்றவர் கலைஞர். அவரது மறைவுக்கு பிறகு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. திமுகவும் இதுவரை யார் வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை. இந்த நிலையில் கலைஞர் போட்டியிட்ட இடத்தில் திமுகவில் யார் வேட்பாளராக அறிவிக்க உள்ளார்கள் என்று மக்கள் மனதில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
அதேநேரத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சின்னமான குக்கர் சின்னத்தை திருவாரூர் தொகுதியில் வீதி தோறும் சுவர் விளம்பரம் வரைய தொடங்கியுள்ளனர். தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டோம். கலைஞருக்கு சொந்த ஊர் திருவாரூர்தான், கலைஞர் இருந்தவரை திருவாரூரில் திமுக செல்வாக்காக இருந்திருக்கலாம், இல்லையென்று சொல்லவில்லை. அதேபோல எனக்கும் சொந்த ஊர் திருவாரூர்தான், வரும் இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை பெறுவோம் என்று சொன்ன டிடிவி தினகரன், பூத் கமிட்டி அமைப்பதற்கான பணிகளையும் துரிதப்படுத்தியுள்ளார்.
திருவாரூரில் அதிமுகவின் இரட்டை இலை ஒருமுறை கூட வெற்றிப் பெற்றது இல்லை. இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சிக்குத்தான் வெற்றி கிடைக்கும் என்ற நிலையில், திருவாரூரில் நடக்கும் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக என்ன செய்யப்போகிறது? ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப்போன்று தினகரன் திருவாரூரை கையில் எடுக்கப்போகிறாரா? என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் கலைஞர் வெற்றி பெற்ற திருவாரூர் தொகுதியை தக்கவைக்க திமுக என்ன வியூகம் எடுக்கப்போகிறது என்று பொதுமக்களும், திமுக தொண்டர்களும் விவாதித்து வரும் நிலையில், இன்று காலை திருச்சி முக்கொம்புவை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின், அதனைத் தொடர்ந்து திருவாரூர் செல்ல இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.