திமுக முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளருமான கே.என்.நேருவின் தம்பியும் தொழில் அதிபருமான ராமஜெயம், கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ம் தேதி நடைபயிற்சி சென்றபோது அதிகாலையில் கொடூரமாக காவிரி கரையில் படுகொலை செய்யப்பட்டார்.
முற்றிலும் செல்போன் எதையும் பயன்படுத்தாமல் ராமஜெயத்தின் செல்போன் மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த கொலையை அப்போதைய திருச்சி காவல் ஆணையர் சைலேஸ் குமார் யாதவ் தலைமையிலான தனிப்படை விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், 2012ம் ஆண்டு ஜுன் மாதம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சுமார் 4 ஆயிரம் பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் ராமஜெயத்திடம் நெருங்கி பழகியவர்கள், அரசியல்வாதிகள் என 240 பேரிடம் விசாரணை நடத்தியும், சிலரிடம் போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தும் முன்னேற்றம் இல்லை. இதற்கு இடையில் அவருடை செல்போன் டவர்களை வைத்து பல ஆயிரக்கணக்கான செல்போன் எண்களை வைத்து சோதனை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை.
இதனால், கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், 3 மாத காலத்திற்குள் விசாரணையை முடிக்குமாறு அறிவுறுத்தியது.
ஆனால் இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்க சென்றதால், ராமஜெயம் வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டதாகவும், எனவே விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் ராமஜெயத்தின் 58வது நினைவு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் கல்லூரியில் அமைந்துள்ள ராமஜெயத்தின் சிலைக்கு அவருடைய அண்ணன் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான கட்சியினர் காலையிலே கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய பிறந்தநாள் விழாவில், நினைவு பிறந்தநாள் விழாவிற்கு வந்திருந்தவர்கள் அண்ணே கொலை செய்யப்பட்டு 7 ஆண்டுகள் ஆச்சு என்ன ஆனது என்றே தெரியலேயே என்று ஒருத்தருக்கு ஒருத்தர் சோகம் அப்பிய குரலில் பேசிக்கொண்டே சென்றனர்.