திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அரியமங்கலம் பகுதி கழகம் சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுபதாவது பிறந்த நாள் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்குக்கு பகுதிச் செயலாளர் ஏ.எம்.ஜி.விஜயகுமார் தலைமை தாங்கினார். கிழக்கு மாநகரச் செயலாளர் எம்.மதிவாணன் சிறப்புரையாற்றினார். முன்னதாக மாவட்ட வழக்கறிஞர் அமைப்பாளர் தினகரன், வட்டக் கழக செயலாளர் சண்முகம் ஆகியோர் வரவேற்றனர். இதில் மாவட்டச் செயலாளரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி என்பது எதையும் இடிக்காமல் புதியவற்றை உருவாக்குவது, எதையும் சிதைக்காமல் சீர் செய்வது, யாரையும் பிரிக்காமல் ஒன்று சேர்ப்பது, அனைவரையும் சமமாக நடத்துவது, எவரையும் புறக்கணிக்காமல் அரவணைப்பது என்பதாகும். அதிலும் தாய்மொழியாம் தமிழ் மொழியை காப்பது திராவிட மாடலின் அடித்தளமாக இருக்கின்றது. இங்கு ஏற்கனவே மூன்று கட்டங்களாக இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடந்திருக்கின்றன. இருந்தபோதிலும் இன்றைக்கும் இந்தியை எந்த வழியிலாவது நுழைக்க வேண்டும் என நினைக்கும் பாசிச ஒன்றிய அரசுக்கு சாவு மணி அடிக்கும் வகையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற இந்த நாளில் உறுதி ஏற்க வேண்டும். அதில் திருச்சி பாராளுமன்றத் தொகுதியின் வெற்றி முதன்மையாக இருக்க வேண்டும். ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி ஆகியவற்றின் மீது முதல்வர் வைத்துள்ள பார்வை மக்களுக்கு நம்பிக்கையை தந்திருக்கிறது" என்று கூறினார்.
கூட்டத்தில் கம்பம் செல்வேந்திரன் கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் வண்ணை அரங்கநாதன், துணை மேயர் திவ்யா, பகுதி கழகச் செயலாளர்கள் தர்மராஜ், மோகன், நீலமேகம், சிவா, பாபு, மாவட்ட துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், லிலாவேலு மற்றும் மாவட்ட மாநகர பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.