ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து இன்று நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்து முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 981 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். ஈவிகேஎஸ். இளங்கோவன் மற்றும் தென்னரசுவிற்கு இடையேயான வாக்குகள் வித்தியாசம் 66 ஆயிரத்து 675 வாக்குகளாக இருப்பதால் இளங்கோவன் வெற்றியை இமாலய வெற்றியாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கு 27.2.2023 அன்று நடைபெற்ற இடைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகப் போட்டியிட்ட தென்னரசுவிற்கு, கழகத்தின் 'இரட்டை இலை' சின்னத்தில் வாக்களித்த மக்கள் அனைவருக்கும், கழகத்தின் சார்பில் எனது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது வழியில், தீய சக்திகளின் முகத் திரையைக் கிழிக்கின்ற வகையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இந்தத் தேர்தல் களத்தை சந்தித்தது.
திமுக அரசு அமைந்த இந்த 22 மாத காலத்தில் திமுக ஆட்சி மக்கள் விரோத, ஜனநாயக விரோதச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை மக்கள் அனைவரும் அறிந்தே இருக்கிறார்கள். அதே வகையான ஜனநாயகப் படுகொலையை ஈரோடு (கிழக்கு) தொகுதி இடைத் தேர்தல் களத்திலும் திமுக அரங்கேற்றியது.
'திருமங்கலம் ஃபார்முலா' என்கிற பெயரில் மக்கள் வாக்குகளை விலைபேசியதைப் போல, 'ஈரோடு கிழக்கு ஃபார்முலா' என்ற ஒன்றை உருவாக்கி, ஆடு மாடுகளை அடைப்பதைப் போல் வாக்காளர்களை அடைத்து வைத்து அருவருக்கத்தக்க ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றி இருக்கிறது ஆளும் திமுக.
திமுக ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கும் இச்சூழ்நிலையில், ஜனநாயக முறைப்படி இந்த இடைத் தேர்தல் நடைபெற்றிருந்தால் கழகம் மகத்தான வெற்றி பெற்றிருக்கும். ஆனால், திமுகவினர் பணநாயகத்தின் மூலமாக காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர். இந்த வெற்றி குறித்து பெருமை கொள்வது திமுகவுக்கு அழகல்ல.
தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியினர் இடைத் தேர்தல் நடைபெறும் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்பது தேர்தல் விதிமுறை. ஆனால், அனைத்து விதிமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டது ஆளும் தி.மு.க” எனத் தெரிவித்துள்ளார்.