Published on 24/06/2019 | Edited on 24/06/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்து. இதற்கு காரணம் தலைமையில் இருந்து தேர்தல் செலவுக்கு நிதி கொடுக்கவில்லை என்று தேமுதிக வேட்பாளர்களில் இருந்து தொண்டர்கள் வரை தேமுதிக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக மாநில கட்சி அந்தஸ்தையும் இழந்தது என்பது குறிப்படத்தக்கது. இதனால் தேமுதிக தலைமை சரியில்லை என்று மாவட்ட நிர்வாகிகள் கடுப்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரி ஏலத்துக்கு வருவதாக வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த ஆலோசனை கூட்டம் தேமுதிக அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களும், நிர்வாகிகளும் தலைமை சரியில்லை என்று கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில் நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்த கடன்களுக்கு வட்டி கட்ட, மாவட்ட நிர்வாகிகளிடம் நிதியுதவி கேட்க இருப்பதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிகின்றன. இதனால் தேமுதிக நிர்வாகிகள் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.