அதிமுகவின் வடசென்னை தெற்கு மாவட்டத்தின் சார்பில் கட்சியில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கும் உறுப்பினர் அட்டையை புதுப்பிப்பதற்கும் உண்டான விண்ணப்பப் படிவங்கள் அதிமுக வட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “சட்டமன்றத்தில் இப்போது பேச்சுரிமையே இல்லை. வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது. பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் இருக்கும் போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை எங்களிடம் தான் கொடுக்க வேண்டும். ஓபிஎஸ் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நீடிப்பதற்கு எந்த முகாந்திரம் உள்ளது. இது குறித்து பலதடவை வற்புறுத்தியாயிற்று. ஆனால் இன்றும் அது குறித்து பேசாத சூழலில் பேச்சுரிமையும் மறுக்கப்படும் சூழல் தான் உள்ளது.
நானும் சபாநாயகராக இருந்தேன். அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்தேன். ஆனால் இங்கு சபாநாயகர் தான் அதிகம் பேசுகிறார். ஆளுநர் இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ன வழிமுறைகளை சொல்லியுள்ளதோ அதன்படிதான் இயங்க வேண்டும். எங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து சட்டமன்றத்தில் சொல்லுவார்கள்.
ஓபிஎஸ் 24 ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடத்துகிறார். அவர் யாரை வேண்டுமானாலும் அழைக்கட்டும். அதிமுக பழனிசாமி தலைமையில் சிறப்பாக இயங்கும் நிலையில் அவர் மாநாட்டை நடத்தட்டும். 2 லட்சம் பேரை கூப்பிட வேண்டுமானால் 200 கோடி ரூபாய் செலவு செய்தால் கூட்டிவிடலாம். பணத்தை கொடுத்து ஆட்களை கூட்டி பெருமையாக சொல்லலாம். ஆனால் பின்னாடி இருந்தது பணம். எனக்கு ஒரு வகையில் சந்தோசம் என்னவென்றால் ஓபிஎஸ்ஸிடம் உள்ள கருப்புப் பணம் இப்பொழுது வெளியில் வருகிறது. அதுவரை சந்தோசம். அதனால் ஒரு தாக்கமும் ஏற்படப் போவதில்லை” எனக் கூறினார்.