தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை மறுநாள் (12/03/2021) தொடங்க உள்ள நிலையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, எந்தெந்த சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது இறுதி செய்யப்பட்டு, அ.தி.மு.க.- பா.ம.க. இடையே தொகுதி ஒதுக்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் தொடர்ச்சியாக, 10 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ம.க. வெளியிட்டுள்ளது.
அதன்படி, பென்னாகரம்- ஜி.கே.மணி, ஆத்தூர் (திண்டுக்கல்)- திலக பாமா, கீழ்பென்னாத்தூர்- செல்வக்குமார், ஜெயங்கொண்டம்- கே.பாலு, ஆற்காடு- இளவழகன், திருப்போரூர்- திருக்கச்சூர் ஆறுமுகம், தருமபுரி- எஸ்.பி.வெங்கடேஸ்வரன், சேலம் (மேற்கு)- அருள், திருப்பத்தூர்- டி.கே.ராஜா, செஞ்சி- எம்.பி.எஸ். ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க.வுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் மாம்பழம் சின்னம் ஒதுக்கியுள்ளது.
ஏற்கனவே, அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும், நாம் தமிழர் கட்சி 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அ.தி.மு.க. கட்சி முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் சேர்த்து 177 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மேலும், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.