தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினருக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய நிர்வாகம், ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் அனைத்துக் கோட்டங்களிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தவிர மற்ற தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், பணி வாய்ப்பு மறுக்கப்படுவது உள்ளிட்ட பல வழிகளில் பழிவாங்கப்படுகிறார்கள். அனைவருக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய நிர்வாகம் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஆளுங்கட்சி ஆதிக்கம் அதிகரிப்பது வாடிக்கையானதுதான். கடந்த காலங்களில் ஆளுங்கட்சி ஆதிக்கம் என்பது எளிதான பணிகளை ஆளுங்கட்சியினருக்கு வழங்குவது, நீண்ட தொலைவுக்கு இயக்கப்படும் சொகுசு பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியை ஆளும்கட்சியின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குவது என்ற அளவிலேயே இருந்துவந்தது. ஆனால், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எதிர்க்கட்சித் தொழிற்சங்கத்தினருக்குப் பணிவாய்ப்பு மறுக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
பாட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சி தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும், அவர்கள் இதுவரை பணியாற்றிவந்த வழித்தடங்களில் பணியாற்ற வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எதிர்க்கட்சி தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு பணி வழங்கப்பட வேண்டுமானால், அவர்கள் திமுகவின் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக சேர வேண்டும்; அடுத்த 5 ஆண்டுகளுக்கான சந்தாத் தொகை ரூ. 3,000 மற்றும் கூடுதலாக ரூ. 300 சேர்த்து ரூ. 3,300 வழங்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அந்தத் தொகையை ஊதியத்திலிருந்து பிடித்துக்கொள்ள விருப்பம் தெரிவித்து கையெழுத்துப் போட்டால் மட்டுமே அவர்களுக்கு பணி வழங்கப்படுகிறது. அதற்கு ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் பணிமனைக்கு வந்தாலும் பணி வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி, அந்த நாட்களில் அவர்கள் பணி செய்யவில்லை என்று விடுமுறை நாட்களில் கழித்துக்கொள்ளுதல், ஊதியத்தை பிடித்தம் செய்தல் உள்ளிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது எந்த வகையிலும் நியாயமல்ல.
கடந்த ஜூன் மாதத்திலும், ஜூலை மாதத்தில் இதுவரையிலும் பாட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பணி வழங்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அதனால் அவர்களுக்கு ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது. திமுக தொழிற்சங்கத்தின் அச்சுறுத்தலுக்கு பணிந்து அவர்களின் தொழிற்சங்கத்தில் இணைவதாகக் கூறி சந்தா செலுத்துபவர்களுக்கு மட்டும் பணி வழங்கப்படுகிறது. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருபவர்கள் அடுத்தக்கட்டமாக பணியிட மாற்றம் செய்யப்படுவர் என்றும் மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதைவிட மோசமான அத்துமீறல் இருக்க முடியாது.
ஆட்சி மாற்றம் இயல்பானது. ஆட்சி மாறும்போது ஆளுங்கட்சியின் தொழிற்சங்கம் வலிமையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவதில் கூட தவறு இல்லை. ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தை வலுப்படுத்த வேண்டுமானால் அதற்கு ஆக்கப்பூர்வமான பல வழிகள் உள்ளன. கடந்த காலங்களில் திமுக தொழிற்சங்கம் என்னென்ன கோரிக்கைகளை முன்வைத்துப் போராடியதோ, அந்தக் கோரிக்கைகளை எல்லாம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தங்கள் கட்சித் தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றினால் நடுநிலையான தொழிலாளர்கள் ஆளுங்கட்சித் தொழிற்சங்கத்தை ஆதரிப்பர். அதை விடுத்து அதிகாரத்தை பயன்படுத்தி, அச்சுறுத்தி எதிர்க்கட்சியினரை ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தில் சேர்க்கலாம்; அவர்களை கட்டாயப்படுத்தி சந்தா வசூலிக்கலாம் என்று நினைத்தால், அந்த அத்துமீறல் அதிக காலம் நீடிக்காது.
அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் சார்பு நிலை கொண்டவையாக இருக்கலாம். ஆனால், அரசாங்கம் அனைவருக்கும் பொதுவானது. போக்குவரத்துக் கழகங்களும் அனைவருக்கும் பொதுவானவை. அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்கள்தான் போக்குவரத்துக் கழகங்களின் வளர்ச்சிக்கு உழைப்பவர்கள். அவர்களிடம் அரசியல் ரீதியாக பாகுபாடு காட்டப்பட்டால் அது போக்குவரத்துக் கழகங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்காது; மாறாக ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களை வீழ்ச்சிப் பாதையில்தான் இழுத்துச் செல்லும். இதை அதிகாரத்தில் இருப்பவர்கள் உணர வேண்டும்.
எனவே, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் அனைத்துப் பணியாளர்களையும் ஒன்றாக பார்க்க வேண்டும்; அவர்களை பழிவாங்காமல் அவர்களின் பணியை அமைதியாகவும், நிம்மதியாகவும் செய்ய அனுமதிக்க வேண்டும். அதன்மூலம் தொழிலாளர்களும், போக்குவரத்துக் கழகங்களும் வளர வகை செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.