தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, பா.ம.க.வுக்கு தொகுதிகளை ஒதுக்கிய அ.தி.மு.க. தலைமை, தே.மு.தி.க., த.மா.கா., பா.ஜ.க., உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்டப் பட்டியலை அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர்.
அந்தப் பட்டியலில், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான பழனிசாமி, ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் டி.ஜெயக்குமார், விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், நிலக்கோட்டை (தனி) சட்டமன்றத் தொகுதியில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தேன்மொழி போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க.வின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் உள்ள பொன்னையன், சி.வி.சண்முகம், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியிடம் அளித்தனர். அதைத் தொடர்ந்து, தேர்தல் அறிக்கையை வெளியிட அ.தி.மு.க. தலைமை ஆயத்தமாகி வருகிறது.
ஏற்கனவே பா.ம.க. தனது சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.