





தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையில் ஆர்.எஸ்.பாரதி, ஐ. பெரியசாமி, பொன்முடி குழுவினர் இன்று (28/02/2021) மாலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீனுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, மனிதநேய மக்கள் கட்சியுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் அப்துல் சமத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜவாஹிருல்லா, "நாளை தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும். 200- க்கும் மேற்பட்ட இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். பெரும்பான்மையுடன் தி.மு.க. ஆட்சி அமைக்கும். நாளை தி.மு.க. தலைவர் ஸ்டாலினைச் சந்திக்க உள்ளோம்" என்றார்.