தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை வெளியீடு உள்ளிட்ட பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக உள்ளன.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அதிக சட்டமன்றத் தொகுதிகளை வழங்க வேண்டும் என்று தி.மு.க.வின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவை கோரியிருந்தனர்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவின் தலைவரான டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், ம.தி.மு.க. தரப்பு 12- க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளை தி.மு.க.விடம் கோரியிருந்தது. இதற்கு தி.மு.க. 4 சட்டமன்றத் தொகுதிகளை வழங்க முன்வந்தது. இதையடுத்து, ம.தி.மு.க.வின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ ஆலோசனை நடத்தியிருந்தார். அதைத் தொடர்ந்து ம.தி.மு.க.வின் உயர்நிலைக் கூட்டம் இன்று (06/03/2021) சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மீண்டும் தி.மு.க.- ம.தி.மு.க. இடையே சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றிருந்தார். அதைத் தொடர்ந்து, தி.மு.க.வின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவின் தலைவரான டி.ஆர்.பாலு தலைமையிலான குழு ம.தி.மு.க.வுக்கு 6 சட்டமன்றத் தொகுதிகளை தருவதாக சம்மதம் தெரிவித்தது. இதனை ம.தி.மு.க. ஏற்ற நிலையில், அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்- ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் முன்னிலையில் இரு கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின் படி, ம.தி.மு.க.வுக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது; இந்த 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் ம.தி.மு.க. 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வைகோ, "ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன் எனக் கலைஞரிடம் உறுதியளித்திருந்தேன். 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடும். ஒரு கட்சிக்கு 12 தொகுதிக்கு குறையாமல் போட்டியிட்டால் தான், ஒரே சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு ஏற்படும். வாக்குச் சேகரிப்பில் ஈடுபட, குறைவான நாட்களே இருப்பதால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். திராவிட இயக்கத்தைப் பாதுகாக்க, தி.மு.க.வுடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டோம்" என்றார்.