விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் விருதுநகர், திருச்சுழி ஆகிய இரண்டு தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, மீதியுள்ள 5 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட முடிவெடுத்து, கீழ்க்கண்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
1.ராஜபாளையம் - கே.டி.ராஜேந்திரபாலாஜி
2.ஸ்ரீவில்லிபுத்தூர் - இ.எம்.மான்ராஜ்
3.சாத்தூர் - ஆர்.கே.ரவிச்சந்திரன்
4.சிவகாசி - லட்சுமி கணேசன்
5.அருப்புக்கோட்டை - வைகைச்செல்வன்
விருதுநகர் அ.தி.மு.க. மேற்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியுடன் நேரடியான மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்த சிட்டிங் (அ.தி.மு.க) சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கு இந்தத் தேர்தலில் சீட் இல்லை.
கடந்த தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்ட திருச்சுழி மற்றும் விருதுநகர் தொகுதிகள், இந்தத் தடவை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் அ.ம.மு.க.-வுக்கென்று வாக்கு வங்கி உள்ளது. அதேபோல், தே.மு.தி.க. ஆதரவு வாக்குகளும் கணிசமாக உள்ளன. அ.தி.மு.க.வுக்கு விழவேண்டிய வாக்குகளை இவ்விரு கட்சிகளும் பிரிப்பதாலேயே, கூட்டணிக் கட்சிகளுக்கு இரண்டு தொகுதிகளை, அ.தி.மு.க. தலைமை தாராளமாக விட்டுக்கொடுத்துள்ளது.
கே.டி.ராஜேந்திரபாலாஜியை, கடந்த தேர்தல் வரையிலும், அ.தி.மு.க. வேட்பாளராக மட்டுமே பார்த்து வந்தது, சிவகாசி தொகுதி. முன்னாள் அ.தி.மு.க. எம்.பி. ராதாகிருஷ்ணன் பார்த்த உள்ளடி வேலைகளால், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சாதி அடிப்படையில் வாக்குகள் மாறி விழ, சிவகாசி யூனியன் தி.மு.க. வசமானது. சட்டமன்றத் தேர்தலிலும், இந்த உள்ளடி தொடரும் என்பதால், சிவகாசி தொகுதியை விட்டு ராஜபாளையம் தொகுதிக்கு மாறியிருக்கிறார் கே.டி.ராஜேந்திரபாலாஜி.