
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மார்ச் 12-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள்.

தற்போதுவரை, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., பா.ஜ.க.வுக்கு தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதேபோல், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்குத் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அதேசமயம், தங்களது கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் அ.தி.மு.க., தி.மு.க. தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்திவருகிறது. அந்த வகையில், தே.மு.தி.க.வுடன் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி எம்.பி., வைத்தியலிங்கம் எம்.பி., ஆகியோருடன் தே.மு.தி.க. சார்பில் அழகாபுரம் மோகன்ராஜ், இளங்கோவன், பார்த்தசாரதி ஆகியோர் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தே.மு.தி.க.வின் பார்த்தசாரதி, "தொகுதி எண்ணிக்கையில் சிறிது இறங்கி வந்திருக்கிறோம். 23 தொகுதிகள் வரை தற்போது நாங்கள் இறங்கிவந்துள்ளோம். சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. தொடர அதிக வாய்ப்பு உள்ளது. தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏதுமில்லை; எங்கள் தரப்பில் பேச்சுவார்த்தை மட்டுமே உள்ளது. தொகுதிப் பங்கீட்டில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்" என்றார்.