மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாகும் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மார்ச் 26- ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனை அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து மாநிலங்களவை சீட் வழங்க தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் கோரியிருந்த நிலையில், அதிமுக தலைமை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கு சீட் வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்பு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பாஜகவில் இணையபோகிறார் என்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
இந்த நிலையில் தனக்கு ராஜ்யசபா சீட் கிடைத்தது குறித்தும், பாஜகவில் இணைவது குறித்தும் ஒரு ஆங்கில நாளிதழுக்கு ஜி.கே.வாசன் பேட்டியளித்துள்ளார். அதில், மாநிலங்களவையில் தமாகாவுக்கு ஒரு இடம் தரவேண்டும் என்று அதிமுகவினரிடம் வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் எல்லாம் கூறி வந்தோம். மாநிலங்களவைகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், மீண்டும் அதிமுகவிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் நாங்கள் எந்த நிபந்தனையும் அதிமுகவிடம் விதிக்கவில்லை. எங்களது கோரிக்கையை ஏற்று அதிமுக மாநிலங்களவை எம்பி பதவியை கொடுத்துள்ளது. இதற்காக மகிழ்ச்சியும் நன்றியும் அதிமுகவிற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் மாநிலங்களவை எம்பி பதவியை பெறுவதற்கு டெல்லியில் உள்ள பாஜக உதவி செய்ததாக சிலர் கூறுகிறார்கள். அது உண்மையில்லை. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்பிகளை தேர்வு செய்ய அதிமுக எம்எல்ஏக்கள் தான் வாக்களிக்க வேண்டும். கூட்டணியில் உள்ள வேறு எந்த கட்சிக்கும் ஒரு எம்எல்ஏ கூட கிடையாது. பாஜகவுக்கும் ஒரு எம்எல்ஏ கூட கிடையாது. அப்படி இருக்கும்போது பாஜகவால் நான் எப்படி மாநிலங்களவை எம்பி பதவியை பரிந்துரைக்கப்பட்டு இருப்பேன் என கூறினார்.
நான் கட்சி மாறி விடுவேன் என்று கூட வதந்தி பரப்புகிறார்கள். இத்தகைய வதந்திகளில் எந்த உண்மையும் கிடையாது. மேலும் நான் பாஜகவில் சேர்ந்து விடுவேன் என்ற வதந்தியை பரப்புகிறார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக இத்தகைய வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அவர்கள் பகல் கனவு பலிக்காது என்றும் கூறியுள்ளார்.