தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது முக்கிய கட்சிகளான அ.தி.மு.க.வும் தி.மு.க.வும். அதேவேளையில் வேட்பாளர்கள் நேர்காணலையும் நடத்தி வருகின்றன.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று (04/03/2021) நேர்காணல் நடைபெற்றது. நேர்காணல் இன்று (04/03/2021) காலை தொடங்கிய நிலையில் இரவு 08.00 மணிக்கு நிறைவு பெற்றது.
நேர்காணலின் போது பேசிய அ.தி.மு.க. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, "விருப்ப மனு அளித்தவர்கள் தங்களை வேட்பாளர்களாக நினைத்துத் தேர்தல் பணியாற்ற வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அ.தி.மு.க.வினருக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படும். வாய்ப்புக் கிடைக்காதவர்கள் சோர்வடைய வேண்டாம்" என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், "சாதகமான சூழல் தற்போது உருவாகி இருக்கிறது" என்றார்.
பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கிய அ.தி.மு.க. தலைமை, பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்தவுடன், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.