மத்திய பா.ஜ.க. மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுக்க பல்வேறு கட்சிகள், விவசாய அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அதே போல் கம்யூனிஸ்ட் கட்சிகளான இடதுசாரி இயக்கங்கள் அதன் விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்களும் மோடி அரசுக்கு எதிராக போராட்டத்தை நடத்தி வருகிறது.
தமிழகம் முழுக்க இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவசாய சங்கங்களின் சார்பில் 5ந் தேதி ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்கள், தாலூகா மற்றும் பேரூராட்சி கிராம பஞ்சாயத்துகளிலும் விவசாயிகள், மக்களை திரட்டி ஆர்பாட்டம் நடத்தினார்கள்.
ஈரோட்டில் காளைமாடு சிலை அருகே அகில இந்திய விவசாயிகள் போராட்டம் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மோடி அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்குழு உறுப்பினர் முனுசாமி என்பவர் தலைமை தாங்கினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வக்கீல் துளசிமணி, ஏஐடியூசி தொழிற்சங்க மாநில செயலாளர் சின்னசாமி மற்றும் காளிமுத்து உட்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மோடி அரசே விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறு என கோஷம் எழுப்பினார்கள்.
மூன்று வேளான் சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுக்க போராட்ட குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.