புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஆதிதிராவிடர் மாணவிகளுக்கான விடுதி கோட்டை பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் காப்பாளராக நாகூர்முத்து உள்ளார். கடந்த 12ஆம் தேதி மதியம் ஒரு மணிக்கு விடுதிக்கு 3 நபர்கள், தாங்கள் ஆதிதிராவிடர் நலத்துறையில் இருந்து விடுதியை ஆய்வு செய்ய வந்ததாகக் கூறி காப்பாளர் அறை உள்பட அனைத்து அறைகளையும் ஆய்வு செய்தனர். மேலும் அங்கிருந்த ஆவணங்களையும் ஆய்வு செய்துள்ளனர். ஆனால் எல்லாம் முடிந்த பிறகு இவர்கள் ஆதிதிராவிடர் நலத்துறையில் இருந்து வரவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, நடந்த விபரங்கள் குறித்து பணியில் இருந்த விடுதி சமையலர் வைரக்கண்ணு அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து மகளிர் விடுதிக்குள் நுழைந்து அனைத்து அறைகளையும் பார்த்துவிட்டு ஆவணங்களையும் பார்த்து அரசு பணியைச் செய்யவிடாமல் செய்த அடையாளம் தெரிந்த பெயர் விபரம் தெரியாத மூன்று நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. புகார் குறித்து அறந்தாங்கி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த தகவல் அறிந்து புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஸ்ரீதர் விடுதிக்கு ஆய்விற்குச் சென்ற போது விடுதிக் காப்பாளர் நாகூர் முத்து அங்குப் பணி நேரத்தில் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பணி செய்யாத விடுதிக்காப்பாளரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.