தமிழகத்தில் சொத்து வரி, மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதை போன்று பேருந்து கட்டணத்தையும் திமுக அரசு விரைவில் உயர்த்தும் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், ''அவர் இரவிலே கனவு கண்டு பகலிலே பேசுகிறவர் என்று அதிமுகவில் உள்ள பலருமே அவரை குறை சொல்வார்கள். தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயராது என தமிழக முதல்வர் பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறார். அதை நான் பல ஊடக பேட்டிகளில் தெரிவித்திருக்கிறேன். ஒன்றிய அரசு தாறுமாறாக டீசல் விலையை உயர்த்தி வருகிற நிலையில் அருகில் உள்ள கர்நாடக, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் பேருந்து கட்டணங்களை உயர்த்தி வருகிறது. ஆனாலும் தமிழகத்தில் அப்படி ஒரு நிலை வராது என தமிழக முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார். தெளிவானவர்களுக்கு இது புரியும். சி.வி.சண்முகம் புரிந்துகொள்ள வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சியில் குறைந்த பேருந்துகள்தான் வாங்கப்பட்டது. ஓட்டுநர், நடத்துநர் சேர்க்கை என்பது இல்லாமல் இருந்துவிட்டது. இதற்கான சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக முதல்வரிடம் எடுக்கூறியுள்ளோம். புதிய பேருந்துகளை வாங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு துவங்கி இருக்கிறது'' என்றார்.