Skip to main content

“முழுமையான விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும்” - இ.பி.எஸ். வலியுறுத்தல்!

Published on 23/08/2024 | Edited on 23/08/2024
A thorough investigation should be conducted and the facts brought out  E.P.S. Emphasis

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை போலியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கலையரங்கில் தங்கியுள்ளனர். இத்தகைய சூழலில் தான் கடந்த 9 ஆம் தேதி கலையரங்கில் வழக்கம்போல் 12 வயது சிறுமி ஒருவர் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் அங்கு வந்த தேசிய மாணவர் படையின் பயிற்றுநர் என்று கூறிய காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் (வயது 32) சிறுமியை அங்கிருந்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது தொடர்பாகப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய நபராக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதேசமயம் சிவராமனின் தந்தையும் சாலையில் மதுபோதையில் இருந்த போது இருசக்கர வாகன விபத்தில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

A thorough investigation should be conducted and the facts brought out  E.P.S. Emphasis

இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி, பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவராமன், காவல் துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே எலி மருந்து சாப்பிட்டு, காவல் துறையால் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று (23.08.2024) காலை மரணமடைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. மேலும், அவரது தந்தை அசோக்குமார் என்பவரும் நேற்று (22.08.2024) இரவு மதுபோதையில் இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு தொடர் மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், அவர் கொல்லப்பட்டிருக்கலாமோ என்று பொதுமக்களால் கேள்வி எழுப்பப்படுகிறது.

போலி என்.சி.சி. பயிற்சி முகாம்கள் எத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது?. இதுவரை எத்தனை முறை நடைபெற்றுள்ளது?. கிருஷ்ணகிரி தவிர வேறு மாவட்டங்களில் இதுபோல் போலி என்.சி.சி. முகாம்கள் நடத்தப்பட்டுள்ளனவா?. சிவராமன் தவிர வேறு யாரேனும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனரா?. போலி என்.சி.சி. முகாம்கள் நடத்தி அவர்களுக்கு என்.சி.சி. சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளனவா?. போலி என்.சி.சி. பயிற்சியாளர்களை மாணவிகளுக்குப் பயிற்சியளிக்க அனுமதித்த பள்ளி நிர்வாகத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?. இது போன்ற பல சந்தேகங்களுக்கு விடை அளிக்கக்கூடிய சிவராமன், தற்கொலை செய்து கொண்டது பொதுமக்களிடையே பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

A thorough investigation should be conducted and the facts brought out  E.P.S. Emphasis

இந்த வழக்கில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது. ஏற்கெனவே, தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை வழக்கில் சரணடைந்த விசாரணைக் குற்றவாளி ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட போது எழுந்த கேள்விகளுக்கும் திமுக அரசிடமிருந்து முழுமையான பதில் வரவில்லை. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தை, மகன் இருவரின் மரணங்கள் காவல் துறை நடத்தும் நாடகமோ என்ற சந்தேகமும் எழுகிறது. பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான விடைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்