வேளாண் சட்டத்திற்கு எதிராக திருவாரூரில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி போலீசாரின் தடைகளை தகர்த்து நடந்திருக்கிறது.
டெல்லியில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரண்டு மாதங்களாக போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராடி மாண்டுபோன விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தியும் இந்தியா முழுவதும் குடியரசு தினத்தன்று டிராக்டர் அணிவகுப்பு நடத்துவது என விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனாலும் அதை தடுத்து நிறுத்த மத்திய அரசும், தமிழக அரசும் முடிவெடுத்து ஒத்திகைவரை பார்த்தனர். ஆனால் அந்தத் தடைகளைத் தகர்த்து பல இடங்களில் பேரணி நடந்துள்ளது.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தின் கொரடாச்சேரியில் இருந்து டிராக்டர் பேரணியை துவங்க திட்டமிட்டு கிளம்பினர். அதை தடுத்து நிறுத்த மாவட்ட காவல்துறை போலிஸாரை குவித்தும் தடுப்புகளை அமைத்தும் தடுக்க முயன்றனர்.
ஆனாலும் விவசாயிகளின் வீரியமான டிராக்டர் பேரணிக்கு முன்பு போலிஸாரின் தடுப்புகள், தகந்து போனது, அனைத்து தடுப்புகளையும் உடைத்துக்கொண்டு முன்னேறி திருவாரூர் நகரத்தை வந்தடைந்து ரயில் நிலையத்தை சுற்றி நின்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாயிகளின் போராட்டத்தால் திருவாரூர் மாவட்டம் பரபரப்பாக இருக்கிறது.