நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
மேலும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க., நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர்.
அந்த வகையில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, ஆ. ராசா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த குழுவினர் தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக நடத்திய பேச்சுவார்த்தையில் தொகுதி ஒதுக்கீடு குறித்த உடன்பாடு எட்டப்பட்டது. அதில், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் நடத்திய முதற்கட்ட பேச்சுவார்த்தையில் 2 தனித் தொகுதிகளையும், ஒரு பொதுத் தொகுதியும் கேட்டிருந்தன. இந்நிலையில், திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடையே இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்பட்டது. மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக நேரம் ஒதுக்கியிருந்தும் விசிக நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் இன்று (02-03-24) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தேர்தல் நிதிக் குழு, தலைமையக ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, பரப்புரை குழு என 4 குழுக்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. அதில், கவுதம சன்னா தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்படும். பாவரசு தலைமையில் தேர்தல் நிதிக் குழு அமைக்கப்படும். வன்னியரசு தலைமையில் தலைமையக ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும். ஆளூர் ஷா நவாஸ் தலைமையில் தேர்தல் பரப்புரை ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும்.
உயர்நிலைக் குழு கூட்டம் காரணமாக திமுக உடனான பேச்சுவார்த்தையில் இன்று பங்கேற்க இயலவில்லை. வர இயலாமைக்கு வருத்தம் தெரிவிப்பதாக திமுக தொகுதி பங்கீட்டு குழுவுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அதனால், ஓரிரு நாளில் திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்போம். 2 தனித் தொகுதி, 1 பொதுத் தொகுதியை கேட்டுப் பெறுவது நலம் பயக்கும் என உயர்நிலைக் குழுவில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்கை புரிதலோடு இயங்குகின்ற கட்சிகள் தான் திமுக கூட்டணியில் உள்ளன. அதனால், திமுக கூட்டணியில் உள்ளோம். திமுக கூட்டணியில் தான் தொடர்ந்து பயணிப்போம். அதில் எந்த ஊசலாட்டமும் இல்லை.
திமுக கூட்டணியில் தான் விடுதலைச் சிறுத்தைகள் இந்த தேர்தலை சந்திக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. பரஸ்பர புரிதலில் திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் ஏற்படும். கூட்டணி கட்சிகளுக்கு இடையே எந்த இடைவெளியும் ஏற்படாது. அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி என்பது காங்கிரஸ் தலைமையில் தான் உள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஏதேனும் இடைவெளி ஏற்படும் என நினைத்து அதில் நுழையலாம் என யாரும் காத்திருக்க வேண்டாம். பா.ஜ.க - அதிமுக கூட்டணியில் எந்த செயல்பாடும் இல்லாமல் இருப்பதால் திமுக கூட்டணி பற்றி பேசுகிறார்கள். திமுக கூட்டணியில் சிறிய சிராய்ப்பு கூட ஏற்படாது.