சிதம்பரம் (தனி) மக்களை தொகுதியில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக கூட்டணி கட்சியினர்களுடன் இணைந்து தீவிர தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சனிக்கிழமையன்று சிதம்பரம் நகரத்திலுள்ள காரியபெருமாள்கோவில் தெருவில் பிரச்சாரத்தை தொடங்கினார். இதனை தொடர்ந்து கீழவீதி, மேலவீதி, கோவிந்தசாமி தெரு, அண்ணாதெரு உள்ளிட்ட நகரின் 33 வார்டுக்கும் கூட்டணி கட்சியினருடன் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் கூடியிருக்கும் மக்களிடம் அவர் பேசுகையில், “நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. தமிழகத்திலும் எடப்பாடிக்கும் எதிரான அலை வீசுகிறது. கடைசி நேரம் என்பதால் காசு கொடுத்து நமது வெற்றியை பாதிப்படைய செய்வார்கள். அப்படி காசு கொடுத்தால் வாங்கி பானையில் போட்டுவையுங்கள் அது கொள்ளை அடித்த காசு தான் பாரவாயில்லை. வரும் 18-ம் தேதி மறக்காமல் பானை சின்னத்திற்கு வாக்களியுங்கள். கடந்த 40 ஆண்டுகாலம் ஒடுக்கப்பட்ட மக்களின் தலை நிமிர்வுகாக பொதுவாழ்க்கையில் ஈடுபடுத்தி கொண்டு தன்நலமின்றி வாழ்ந்து வருகிறேன். உங்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க பானைச்சின்னத்திற்கு வாக்களியுங்கள்” என்று வாக்குசேகரித்தார்.
இவருடன் திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், நகர செயலாளர் செந்தில்குமார், காங்கிரஸ் நகர தலைவர் பாலதண்டாயுதம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ராஜா, மதிமுக மாவட்ட செயலாளர் குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகி சேகர் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.