பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சை அரிசி மற்றும் சர்க்கரை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார். ஜனவரி 2-ம் தேதி முதல் இது வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுவர். இதனால் 2356.67 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு கரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பச்சை அரிசி மற்றும் சர்க்கரை மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பொங்கல் தொகுப்புடன் 5000 வழங்கவேண்டும் எனக் கூறினார்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, “கரும்பு கொடுத்தால், அரை கரும்புதான் கொடுத்தீர்கள், முக்கால் கரும்புதான் கொடுத்தீர்கள் எனப் புகார் வருகிறது. முந்திரிபருப்பு கொடுத்தால் முந்திரி சின்னதாக இருக்கிறது எனப் புகார். வெல்லம் கொடுத்தால் அது உருகுகிறது எனப் புகார். இதை எல்லாம் கருத்தில் கொண்டுதான் முதல்வர் பொங்கலுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வதற்குத் தேவையான 1000 ரூபாய் பணம் அறிவித்துள்ளார்கள்” எனக் கூறியுள்ளார்.