ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். சின்னங்கள் முறையாக கட்சி வேட்பாளர்களுக்கும் சுயேச்சை வேட்பாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டது. தற்போது மொத்தம் 77 வேட்பாளர்கள் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் கே.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுகவின் 33 அமைச்சர்கள் இங்கே முகாமிட்டுள்ளனர். முதலமைச்சர் மட்டும் வரவில்லை. அவரும் இரண்டு தினங்களில் வந்துவிடுவார். 33 அமைச்சர்களும் பணத்தை வாரி இறைக்கிற காட்சியை பார்க்கிறோம். மனமா பணமா என்றால் மனம் தான் என்று இரட்டை இலை வெல்லும் என்பது வாக்காளர்கள் மத்தியில் தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் தெரிகிறது. இரண்டு ஆண்டுகளாக திமுக ஆட்சி செயல்பட்ட விதத்தை மூடி மறைப்பதற்காக அவர்கள் பணத்தை வாரி இறைக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் மக்களை ஆடு மாடுகள் போல் பட்டியில் அடைக்கிற காட்சிகளை நாம் பார்க்கிறோம். அதிகாரத் துஷ்பிரயோகத்தை எல்லை மீறி அவர்கள் செய்து கொண்டு உள்ளார்கள். அதற்கெல்லாம் தகுந்த பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.
அமைச்சர் செஞ்சி மஸ்தான் எடப்பாடி பழனிசாமியை சந்தர்ப்பவாதி எனச் சொல்லியுள்ளார். அவருக்கு சந்தர்ப்பத்திற்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. அதை தக்கவைக்க சந்தர்ப்பவாதியாகப் பேசுகிறார். அவர் பழனிசாமியை பற்றி பேச அடிப்படை முகாந்திரமும் இல்லை. அமைச்சர்கள் எல்லோரும் தங்கள் இருப்பை காட்டிக்கொள்வதற்காகப் பேசுகிறார்கள்” எனக் கூறினார்.