'சேலம் பெரியார் பல்கலைக் கழகம் இட ஒதுக்கீட்டைக் கடைபிடிக்கத் தொடர்ந்து மறுப்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது' என திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அதன் தலைவர் கொளத்தூர் மணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நூலகர், உடற்கல்வி இயக்குநர் போன்ற பதவிகள் பட்டியலினத்திற்கு வழங்க மறுத்து, பொதுப் போட்டிக்கு சென்றதை திராவிடர் விடுதலைக் கழகம் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், தற்போது பதிவாளர் தேர்வும் அப்பட்டமான விதிகள் மீறப்பட்டு இன்று நேர்காணல் நடைபெறுவதாக அறிகிறோம். பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தும் துணைவேந்தர் கண்டு கொள்ளாமல் நேர்காணல் நடைபெற்றதாக அறிகிறோம்.
பல்கலைக்கழகங்கள் சமூகநீதியைக் கண்ணாகப் போற்றும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பது துணை வேந்தருக்கு தெரியுமா என்பது தெரியவில்லை. தேர்வாணையருக்கு ஒருவரே விண்ணப்பித்த நிலையில் போட்டி இல்லை எனில் நேர்காணல் நடத்த கூடாது என்ற விதியையும் மறந்துவிட்டாரா துணைவேந்தர் என்பதும் புரியவில்லை. ஏற்கெனவே ஒரு துறையில் ஒருவர் மட்டும் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தார் என்ற காரணத்தால் நேர்காணலை நடத்தாத இதே பெரியார் பல்கலைக்கழகம், இன்று தேர்வாணையருக்கு நேர்காணல் நடத்த வேண்டியது ஏன்?
பேரம் படிந்து விட்டது. பதிவாளர் விசுவநாத மூர்த்தி, தேர்வாணையர் சந்திரசேகர் என்பது பரவலாக பேசும் பொருளாக மாறியுள்ளது.சமூகநீதியை மட்டுமல்ல; ஒற்றை விண்ணப்பத்தை மட்டும் வைத்துக்கொண்டு நேர்காணல் குறித்த விதிகளையும் மீறி அப்பட்டமாக துணைவேந்தர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.
அரசின் அனுமதியுடன் பட்டமளிப்பு விழா நடைபெறுவது தான் மரபு. ஆனால் நவம்பர் 24 பட்டமளிப்பு விழா என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அரசின் அனுமதியோடு தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் வரும் 6ம் தேதி சிண்டிகேட் கூட்டம் நடைபெறுவதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதில் அரசுத் துறை செயலாளர்கள் எட்டு பேர் ஆட்சிக்குழு உறுப்பினராக உள்ளனர். இவர்கள் கட்டாயம் ஆட்சிக் குழுவில் கலந்து கொண்டு பல்கலைக் கழகத்தின் மீது அரசுக்கு உள்ள எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். இல்லையேல் சிண்டிகேட் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசின் பிரதிநிதிகள் இல்லாமல் பதிவாளர் நேர்காணல் நடத்துவது மறைமுகமாக பல்கலைக் கழகம் அரசுக்கு விடுக்கும் சவாலாகும்.
நேற்று மூத்த பேராசிரியர் பதவிக்கு போலி சான்றிதழ் மற்றும் அரசு அமைத்த விசாரணை வளையத்தில் உள்ள தமிழ்த்துறை பெரியசாமிக்கு நேர்காணல் நடத்துகிறார் துணைவேந்தர். ஏற்கனவே பதிவாளர் பொறுப்பு தங்கவேலுவுக்கு மூத்த பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர் மீதும் அரசு விசாரணை நிலுவையில் உள்ளது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; காலம் தாழ்த்தாமல் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் அவர்களை பணிநீக்கமோ அல்லது பணியிடை நீக்கமோ செய்து, ஏற்கனவே ஒரு முறை இந்திய ஆட்சிப் பணியில் உள்ள ஒருவர் தலைமையில் பல்கலை நிர்வாகத்தை ஒப்படைத்தது போல இப்போதும் நியமித்து முறைகேடுகளைக் களைய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசினரையும், குறிப்பாக உயர்கல்வித்துறை அமைச்சகத்தையும் திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.