அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் நீண்டு வரும் நிலையில் அக்கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'அதிமுக உட்கட்சி விவகாரங்கள் குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தலையிடாது. அதைப்பற்றி நான் எதையும் பேச மாட்டேன். அது சரியல்ல... முறையல்ல... நாங்கள் ஒரு மரியாதைக்குரிய கூட்டணிக் கட்சி. எனவே அதிமுகவுடைய உட்கட்சி விவகாரங்கள் குறித்து நான் பேசுவது எந்த விதத்திலும் சரியல்ல. அதிமுகவைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் அதிமுக தமிழகத்தில் உள்ள ஒரு பலமான கட்சி. அந்த கட்சி மேலும் சிறக்க வேண்டும், வளர வேண்டும், உயர வேண்டும்.அது மட்டும் தான் எங்களுடைய எண்ணமாக இருக்கும். அதற்கு மேல் கூறுவதற்கு ஒன்றுமில்லை'' என்றார்.
அப்பொழுது 'பாஜகவின் பிரித்தாலும் சூழ்ச்சிக்கு அதிமுக பலியாகிவிட்டதாகக் கூறுகிறார்களே. அது பற்றி உங்கள் கருத்து என்ன?' எனச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த ஜி.கே.வாசன், ''இந்த கருத்து தமிழகத்தின் ஆளுங்கட்சி மற்றும் அதனுடைய கூட்டணிக் கட்சிகளுடைய பயத்தைக் காட்டுகிறது. இன்றைக்கு அதிமுக தமிழகத்தினுடைய பலமான எதிர்க்கட்சியாக ஒருபுறம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மறுபுறம் மத்தியிலேயே ஆட்சியிலே இருக்கக்கூடிய பாஜக தமிழக மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் மறுபுறம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சிறப்பாகத் தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கூட்டணிக் கட்சிகள் எல்லா மாவட்டங்களிலும் நிகழும் பிரச்சனைகளை எடுத்துக்கூறிச் சிறப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெற இருக்கிறது. அதற்கு அடித்தளமாக எங்களுடைய பணிகள் வெற்றிக்கு வித்திடும் என்ற பயத்தில் தான் ஆளுங்கட்சி மற்றும் அதன் சார்ந்த கூட்டணிக் கட்சிகள் தங்களது பயத்தை இப்படி கூறி வெளிப்படுத்துகிறார்கள்'' என்றார்.