Skip to main content

“எதிர்க்கட்சித் துணைத்தலைவர் என்ற பதவியே இல்லை” - சபாநாயகர் அப்பாவு

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

"There is no post of Deputy Leader of Opposition" Speaker Appavu

 

இன்று சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவுவை எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்தனர். எதிர்க்கட்சித்தலைவராக பன்னீர்செல்வத்திற்கு பதில் உதயகுமாரை நியமிக்கக் கோரி அளித்திருந்த மனுவை அங்கீகரிக்க வலியுறுத்தியுள்ளனர் என தகவல் வெளியானது.

 

மேலும் சபாநாயகர் தன்னை சந்தித்த எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏக்களிடம், “எதிர்க்கட்சித் துணைத்தலைவர் யார் என்பதை சட்டப்பேரவையில் அறிவிப்பேன்” என சபாநாயகர் அப்பாவு கூறினார் என்றும் தகவல் வெளியானது.

 

சரியாக 10 மணிக்கு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்றது. எதிர்க்கட்சித் துணைத்தலைவர் சர்ச்சை நீடிக்கும் நிலையில் பேரவையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அருகருகே அமர்ந்திருந்தனர்.

 

உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத்தலைவராக அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதன் பின் தர்ணாவில் ஈடுபட்ட பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்களை சபாநாயகரின் உத்தரவின் பேரில் அவைக் காவலர்கள் வெளியேற்றினர்.

 

இதன் பின் அவையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “அவையில் விவாதிக்கப்பட இருந்த அறிக்கைகளை விவாதிக்க பயந்துதான் இன்றைக்கு அமளியில் ஈடுபட்டுள்ளனர். வெளியே போவதற்கும் முறைகள் உண்டு. ஆனால் இங்கே அமர்ந்து  வெளியே போவதற்கு காவலர்களுடன் முரண் பிடித்தது அநாகரீகமான செயலாகும்” எனக் கூறினார்.

 

இதன் பின் பேசிய சபாநாயகர் அப்பாவு, “சட்டமன்ற விதியின் படி எதிர்க்கட்சித் தலைவர் பதவிதான் அங்கீகரிக்கப்பட்டது. மற்ற பதவிகள் எல்லாம் அவர்களது சட்டமன்ற உறுப்பினர்களை திருப்திபடுத்தக் கொடுக்கும் பதவிகள். சபையில் இருக்கைகள் ஒதுக்கப்படுவது குறித்து முடிவெடுப்பது பேரவைத் தலைவரின் முழு விருப்பம்தான். அதில் யாரும் தலையிட முடியாது” என்று கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்