அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய தேர்தல் ஆணையம் 10 நாட்கள் கால அவகாசம் கோரி இருந்தது. டெல்லி உயர்நீதிமன்றம் நிர்ணயித்திருந்த காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுவதால் நேற்று(20/04/2023) இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது. தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ள நிலையில் இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பண்ருட்டி ராமச்சந்திரன் பல கட்சிகளுக்கு சென்றவர். ஓபிஎஸ் பக்கம் சென்று அவரையும் உருப்படாமல் செய்துவிட்டார். கர்நாடகத் தேர்தலில் மூன்று இடங்களில் போட்டியிடுகிறார்கள். ஓரிடத்தில் புலிகேசி எனும் தொகுதியில் இரட்டை இலை சின்னம் நிற்கிறது. இரட்டை இலையை எதிர்த்து போட்டியிடலாமா. ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோருக்கு வாழ்வளித்த சின்னம் இரட்டை இலை. வாழ்வளித்த சின்னத்தினை எதிர்த்து நின்றால் எப்படி.
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ஓபிஎஸ்-ன் தொல்லை இங்கிருந்தது; கர்நாடகத்திற்கு சென்றால் அங்கும் இருக்கிறது. ஓபிஎஸ், டிடிவி, சசிகலா இவர்களைத் தவிர யாரும் கட்சி விரோத செயல்களில் ஈடுபடவில்லை. ஓபிஎஸ் குடும்பத்தாரை சேர்க்க முடியாது. ஆடு உறவு குட்டி பகையா. ஆடும் தேவையில்லை குட்டியும் தேவையில்லை. அவர்களெல்லாம் எதிரி இல்லை. மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தால் சேர்க்கலாம் என பழனிசாமி சொல்லியுள்ளார். இரு கரம் கொண்டு வரவேற்கிறோம்” எனக் கூறினார்.