'இன்னொரு பிஜேபி தலைவர் தமிழ்நாட்டுக்கு வந்து விட்டார்' என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் விளம்பரத்திற்காக எதை வேண்டுமானால் செய்யக்கூடியவர். எதை வேண்டுமானாலும் பேசக்கூடியவர். அவருக்கு யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இதுபோன்று முரண்பாடாக பேசினால் முரண்பாடாக செயல்பட்டால் செய்தியில் தினம் வருவீர்கள் என்று யாரோ அவரிடம் சொல்லி இருக்கிறார்கள். அதை வைத்துக்கொண்டு அவர் முரண்பாடாகவும், ஒரு கட்சியின் மீது குற்றச்சாட்டுகளை சொல்லுகின்ற பொழுது கண்ணை மூடிக்கொண்டு செல்கின்ற பழக்கத்தையும் வைத்திருக்கிறார்.
இப்பொழுது அவருக்கு என்ன சவால் வந்திருக்கிறது என்றால் இன்னொரு பிஜேபி தலைவர் தமிழ்நாட்டுக்கு வந்து விட்டார். ஆளுநர் ரவி. அவர் இவரை விட வேகமாக பேசி வருவதால் ஊடகங்களின் கவனம் அந்த பிஜேபி தலைவர் பக்கம் சென்றுவிட்டது. அதுதான் உண்மை. காங்கிரஸ் கட்சி எதிர்காலம் மட்டுமல்ல எல்லா காலமுமே உள்ள கட்சி. காங்கிரஸ் மிகப்பெரிய எழுச்சியை பார்த்திருக்கிறது, வீழ்ச்சியைப் பார்த்திருக்கிறது, சோதனைகளைப் பார்த்திருக்கிறது, துரோகங்களைச் சந்தித்திருக்கிறது. சிறைச்சாலையில் வாழ்ந்திருக்கிறது, சிறைச்சாலையிலேயே பிறந்திருக்கிறது. காங்கிரசிற்கு இல்லாத அனுபவங்களே கிடையாது. எனவே காங்கிரஸிற்கு எதுவுமே புதிய அனுபவமாக இருக்காது. நாங்கள் இல்லாமல் இந்தியா இல்லை. அதை நாங்கள் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்லிக் கொள்கிறோம்'' என்றார்.