சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ஊடகத்தை சந்தித்த ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் கட்சிக்கு மட்டுமே நான் தலைமை ஏற்பேன். முதல்வர் பதவியை நான் ஏற்கமாட்டேன். என்னை வருங்கால முதல்வர்... வருங்கால முதல்வர் என சொல்லுவதை முதலில் நிறுத்துங்கள். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டும். நான் முதல்வர் இல்லை ஆனால் அரசியல் புரட்சி வேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து உழைத்து அந்த எழுச்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் அப்படி மக்களிடம் மாற்றத்துடன் கூடிய எழுச்சி ஏற்பட்டால்தான் நான் அரசியலுக்கு வருவேன் என்றார்.
இந்த நிலையில், தேனி மாவட்டம் தேவாரத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர், குடியுரிமை சட்ட திருத்ததால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். இதில் உள்ள முக்கிய நுணுக்கங்களைப் படிக்கவேண்டும். அப்படி முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டால் களத்தில் இறங்கி போராட தயாராக உள்ளேன் என்று கூறினார். அதன் பின்பு ரஜினியின் அரசியல் வருகை குறித்து சரத்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய சரத்குமார் 'யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அதேபோல் என்னிடம் மக்கள் பிரச்னை குறித்து கேள்வி கேளுங்கள். அதை விடுத்து ரஜினி குறித்து கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் 5 லட்சம் ரூபாய் என் அக்கவுண்டில் போடுங்கள்' என்றார்.