கடந்த 7ந் தேதியிட்ட 14 பக்கங்கள் கொண்ட வக்கீல் நோட்டிசை சசிகலா வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் திவாகரனுக்கு அனுப்பியிருந்தார். அந்ந நோட்டீசில், சசிகலாவுக்கு துரோகம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ பி எஸ் ஆகியோருடன் நெருக்கம் காட்டி வருவதாலும் கட்சி உறுப்பினரே இல்லாத நீங்கள் சசிகலா பெயரை, படங்களை பயன்படுத்துவதாகவும் இனிமேல் படங்களை பயன்படுத்தக் கூடாது என்றும் தினகரனை பற்றி பேசக்கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சசிகலாவின் தம்பியும் அம்மா அணி தலைமை ஒருங்கிணைப்பாளருமான திவாகரன் மன்னார்குடியில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். திங்கள் கிழமை காலை மன்னார்குடி 3வது தெருவில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு திவாகரன் வந்தார். அப்போது அவரது ஆதரவாளர்களும் வந்தனர். கட்சி அலுவலத்தில் அம்மா அணிக்கு என்று வைக்கப்பட்டிருந்த பலகையில் வைக்கப்பட்டிருந்த சசிகலா படத்தை எடுத்துவிட்டனர். கட்சி அலுவலகத்திலும் சசிகலா படம் நீக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
ஜெயலலிதா உயிரை காப்பாற்றியது யார் என்பது பழைய ஆட்களுக்கு தெரியும். போலீசால் திட்டமிட்டு தாக்கப்பட்டபோது என் நெஞ்சில் சாய்து கிடந்தார் ஜெயலலிதா. அத்தனை அடிகளையும் வாங்கிக்கொண்டு அவரது உயிரை காப்பாற்றியது திவாகரன்.
சசிகலா எங்களுடன் இருந்ததால் மன்னார்குடி மாஃபியா என்று சொல்லுவார்கள். இனி அந்த அவப்பெயர் எங்களுக்கு வராது. சசிகலாவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. எனக்கு இப்போது விடுதலை கிடைத்துள்ளது. அம்மா அணி என்ற பெயரில் தொடர்ந்து செயல்படுவோம். கூட்டணி குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வோம்.
இந்த 14 பக்க கடிதம் சசிகலாவுக்கு தெரிந்து கொடுத்திருந்தாலும், தெரியாமல் கொடுத்திருந்தாலும் எனக்கு இதனால் எந்த வருத்தமும் ஏற்படவில்லை. மாநில அரசின் செயல்பாடுகள் ஒரு சிலவற்றை பாராட்டலாம். ஒருசிலவற்றை ஏற்க முடியாது. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் நல்ல திட்டம். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் பக்கம் யார் இருக்கிறார்கள் என கேட்கும்போது, நான் செத்தா சசிகலாவுக்கும் தீட்டு இல்ல, தினகரனுக்கு தீட்டு இல்ல. இவ்வாறு கூறினார்.