தமிழக அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்களுடன் கட்சி நிலவரம் பற்றி பேசினார் எடப்பாடி.
அப்போது, எப்பொழுது தேர்தல் வந்தாலும் நம்ம வாக்குகளை தக்க வைப்பதற்கான பணிகளை செய்யுங்கள். தினகரன் கட்சியை இணைப்பது குறித்து மோடி முயற்சி என்ற செய்திகளை நம்ப வேண்டாம். அப்படி ஒன்றும் இல்லை. தினகரனை தவிர யார் வந்தாலும் இணையலாம் என்று சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
அப்போது குறுக்கிட்ட ஓ.பன்னீர்செல்வம், பத்திரிகையாளர்களை சந்திக்கும் சில அமைச்சர்கள்தான், தினகரனை தாக்கி பேசுகிறார்கள். பொதுக்கூட்டங்களில் கூட சில அமைச்சர்கள் தினகரனை பற்றி வாய் திறப்பது இல்லை என்று வருத்தப்பட்டதுடன், தினகரனை தாக்கி பேச தயங்கினால் நாம் நமது செல்வாக்கை இழக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.
அதற்கு பச்சைக்கொடி காட்டி பேசிய எடப்பாடி, நம்மையும் நமது ஆட்சியையும் தாக்கி பேசும் தினகரனுக்கு தக்க பதிலடி கொடுங்கள். அதில் எந்த தயக்கமும் வேண்டாம். அதே நேரத்தில் தினகரன் உடன் இருப்பவர்கள் வந்தால், கட்சியில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள், அவரை நம்பி சென்றவர்கள் தற்போது பரிதாக நிலையில் உள்ளார்கள் என்று கூறுங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார். தேர்தல் காலம் நெருங்குவதாலும், ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவுரைகளாலும் அமைச்சர்கள் இனி தினகரனை தாக்கி காரசார அம்புகளை விடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.