Skip to main content

'எங்களுக்குள் பிரச்சனைகள் இருக்கலாம்; ஆனால் ஆட்சியில் எந்தக் குற்றமும் கண்டுபிடிக்க முடியாது' - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

Published on 26/07/2023 | Edited on 26/07/2023

 

'There may be problems within us but no crime can be found in the government' - CM Stalin's speech

 

திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக பயிற்சிப் பாசறை நடைபெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு நடைபெற்ற இந்தப் பயிற்சிப் பாசறையில் 12,645 பேர் கலந்து கொண்டுள்ளனர். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

நிகழ்வின் மேடையில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''திமு கழகத்தின் தீரர்கள் கோட்டம் தான் திருச்சி. 1971 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில்தான் கலைஞர் நம்முடைய கொள்கை முழக்கங்கள் ஆன 'அண்ணா வழியில் அயராது உழைப்போம்; ஆதிக்கமற்ற  சமுதாயம் அமைத்தே தீருவோம்; வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்; இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்; மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என்ற ஐம்பெரும் முழக்கங்களை நமக்கு உருவாக்கித் தந்தார்.

 

முக்கியமான மாநாடுகளைக் கலைஞர் திருச்சியில் தேர்ந்தெடுத்து நடத்துவார். அப்படி நடத்தக்கூடிய மாநாடுகள் எல்லாம் திருப்புமுனை மாநாடுகளாக அமையும். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திருச்சியில் மாநாடுபோல் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டம் தான் தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமிடும் அளவிற்குச் சிறப்பான பொதுக்கூட்டமாக இங்கு அமைந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் கவனத்தை ஈர்த்த அந்த மாநாட்டை முன் நின்று நடத்திக் காட்டியவர் தான் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு.

 

அவரைப் பாராட்டுவது என்பது என்னை நானே பாராட்டிக் கொள்வது என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. 'நேரு என்றால் மாநாடு; மாநாடு என்றால் நேரு' என்று பெயர் பெற்றவர்தான் நேரு என்பதையும் நான் அடிக்கடி சொல்லி இருக்கிறேன். அத்தகைய பாராட்டுக்கு முழுத் தகுதி படைத்தவர் முதன்மைச் செயலாளர் நேரு. மிகக் குறுகிய காலத்தில் பத்து நாட்களுக்குள்ளாக வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டத்தை நடத்திட வேண்டும் என்று நாங்கள் எடுத்துச் சொன்ன நேரத்தில் அதை ஏற்றுக்கொண்டு மிகச் சிறப்பாகப் பிரம்மாண்டமாக அவர் நடத்திக் காட்டி இருக்கிறார். அதற்காக அவருக்கு மட்டுமல்ல அவருடன் இணைந்து பணியாற்றிய திருச்சி ஒன்றுபட்ட மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

 

பயிற்சிப் பொறுப்பாளர்களே உங்களிடம் வழங்கப்பட்டுள்ள 'திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள்' என்ற புத்தகத்தைப் படித்துப் பார்த்தாலே அரசின் திட்டங்களைப் பற்றி உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்து விடும். யாருக்கு என்ன தேவை அதைக் கண்டறிந்து பெற்றுக் கொடுங்கள்'. ஒருவருக்கு முதியோர் உதவித் தொகை வழங்குவதில் உதவி தேவைப்படலாம். இன்னொருவருக்குப் பட்டா மாறுதல் உதவி தேவைப்படலாம். இப்படி ஒவ்வொருவரின் தேவையைக் கண்டறிந்து அந்தப் பணிகளை நிறைவேற்றித் தாருங்கள். இதனைச் செய்து தர உங்கள் பகுதியினுடைய ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர், கிளைச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சரை நாடுங்கள். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் எடுத்து வரக்கூடிய கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பலமுறை சொல்லியுள்ளேன். மீண்டும் சொல்கிறேன். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் எடுத்து வரக்கூடிய கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வாக்காளர்கள் குடும்பத்துடன் நெருக்கமான நட்பு கொள்ள வேண்டும். அவர்கள் குடும்பத்தில் ஒருவராக மாற வேண்டும். எந்தக் கொம்பனும் நமது ஆட்சியைக் குற்றம் சொல்ல முடியாது. எங்களுக்குள் பிரச்சனைகள் இருக்கலாம்.ஆனால் ஆட்சியில் எந்த குற்றமும் கண்டுபிடிக்க முடியாது'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்