கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது புகார் எழுந்த நிலையில், இது தொடர்பான ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜயை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அதேபோல் ராஜேந்திர பாலாஜியின் உறவினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சென்னை ஆவடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் நாசர், ''முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பல புகார்கள் வந்துள்ளன. பொறுத்திருந்து பாருங்கள். ராஜேந்திர பாலாஜி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்க்கட்சி மட்டுமல்ல ஆளுங்கட்சியில் யார் தவறு செய்தாலும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்'' எனத் தெரிவித்தார்.