வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்பதில் அதீத அக்கறை காட்டுகிறது திமுக. குறிப்பாக, கல்வி கற்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்ற தமிழக மாணவ-மாணவிகள்தான் தமிழகம் திரும்ப முடியாதபடி தவித்து வருகின்றனர். இவர்களை மீட்பதில் தமிழக அரசு அக்கறை காட்டாத நிலையில் திமுகதான் தீவிர கவனம் செலுத்துகிறது. வெளிநாடுகளில் உள்ள தமிழக மாணவர்களும் திமுகவுக்குத்தான் கோரிக்கை வைத்தபடி இருக்கின்றனர். தமிழக அரசை நம்பவில்லை.
கிரிகிஸ்தான் நாட்டில் தவிக்கும் மாணவ-மாணவிகளை மீட்க மத்திய அரசிடம் திமுக எம்.பி. கனிமொழி முயற்சித்து எடுத்துள்ள நிலையில், ஏற்கனவே திமுக எடுத்த நடவடிக்கைகளில் குவைத்தில் தவித்த தமிழர்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் திரும்ப முடியாமல் குவைத் நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து, குவைத்தில் இருந்தபடி தமிழக பெண்கள் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தனர்.
அந்த வீடியோவை பார்த்த மு.க.ஸ்டாலின், ’’குவைத்தில் தவிக்கும் தமிழர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுங்கள். அதற்கு முன்பாக, அவர்களுக்கு உடனடி என்ன தேவை என்பதை அறிந்து அதனை நிறைவேற்ற முயற்சியுங்கள்‘’ என தனது தங்கையும் திமுக எம்.பி.யுமான கனிமொழியிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
உடனே பன்னாட்டு தி.மு.க. அமைப்பாளர் தியாகராஜனை தொடர்பு கொண்டு பேசிய கனிமொழி, அவர் மூலமாக வீடியோ வெளியிட்ட பெண்களிடம் பேசினார். அவர்களோ, தமிழகம் திருப்ப உதவி செய்ய வேண்டும்; அதற்கான டிக்கெட் செலவுகளுக்குக் கூட பணம் இல்லை; சாப்பிட கூட வழியில்லை எனத் தெரிவித்தனர். அனைத்தையும் திமுக பார்த்துக்கொள்ளும் என அவர்களுக்கு நம்பிக்கை தெரிவித்த கனிமொழி, மீண்டும் தியாகராஜனை தொடர்புகொண்டு, அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துச் சமையல் பொருட்களையும் அவர்களுக்கு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதன்படி தமிழர்களுக்கு சமையல் பொருட்கள் உடனடியாக விநியோகிக்கப்பட்டது.
இதனை அடுத்து இந்தியாவுக்கு வரவழைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அம்னெஸ்டி விமானங்கள் மூலம் குவைத்தில் தவித்த தமிழர்கள் நேற்று இரவு இந்தியாவுக்கு பயணப்பட்டனர். குவைத் அரசாங்கம் விமானங்களை அனுப்ப தயாராகவே இருந்தது. தமிழக அரசு மெத்தனப்போக்கால் அலைக்கழிக்கப்பட்டது. இந்திய அரசின் வெளியுறவுத்துறை மூலம் தமிழர்கள் இந்தியாவுக்கு வருவதற்கான முயற்சிகளைத் தொடர்ச்சியாக எடுத்திருந்தார் கனிமொழி.
குவைத்திலிருந்து திருச்சிக்கு ஒரு விமானமும், குவைத்-விஜயவாடாவுக்கு ஒரு விமானமும், குவைத்-அமிர்தசர்ஸுக்கு ஒரு விமானமும் என 3 விமானங்கள் மூலம் தமிழர்கள் இந்தியாவுக்கு இன்று வந்து சேர்ந்துள்ளனர். விமானத்தில் ஏறிய தமிழச்சிகள், திமுகவுக்கும் அதன் தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். தமிழக அரசு செய்ய வேண்டிய கடமையைச் சத்தமில்லாமலும் விளம்பரம் இல்லாமலும் செய்து வருகிறது திமுக!