அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவும், திமுகவில் அண்மையில் இணைந்தவருமான தங்க தமிழ்ச்செல்வன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர், நான் இருக்கும்போது, மாவட்டச் செயலாளராக இருக்கும்போது பக்கத்து மாவட்ட செயலாளரை அனுப்பி வேவு பார்த்தால் கோபம் வரத்தானே செய்யும். இதனை கேட்டால் உளறுகிறார் என்கிறார்கள். நான் உளறவில்லை. ஆரம்பத்தில் இருந்து தினகரன்தான் உளறுகிறார். 18 எம்எல்ஏக்களை 18 படி என்று சொன்னார். இப்ப 18 பேரை கண்டுகொள்ளவில்லை. 18 பேருக்கும் பதவிதான் போனது. அந்த 18 பேரின் குடும்பம் எவ்வளவு வேதனை படும். அவர்களை காப்பாற்றினீர்களா?
அதிமுகவை மீட்போம், இரட்டை இலையை மீட்போம் என்றார். மீட்டுவிட்டாரா? 18 சட்டமன்றத் தொகுதியில் ஒருவரையாவது ஜெயிக்க வைக்க முடிந்ததா? எம்.பி. தேர்தல் நமக்கு தேவையில்லை. அவ்வளவு பெரிய கட்சி இல்லை அமமுக என்று சொன்னேன். ஆரம்பத்தில் இருந்து சொன்னேன். 18 பேருக்கு பதவி போய்விட்டது. 18 பேரும் எம்எல்ஏ ஆவதுதான் முக்கியம் என்று எவ்வளவோ சொன்னேன். தோற்றவர்கள் நாங்கள். மீண்டும் வெற்றி பெற்றால்தான் மக்கள் நம்புவார்கள் என்று சொன்னேன். எவ்வளவு சொல்லியும் தினகரன் கேட்கவில்லை.
யார் சொல்வதையும் கேட்காமல் தன்னிச்சையாக அவர் எடுத்த முடிவு காரணமாகத்தான் இந்த கட்சி அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது. இந்த தேர்தலில் அமமுகவை அதிமுகவினர் நம்பவில்லை என்பதை காட்டிவிட்டது. எல்லோரையும் ஏமாற்றிவிட்டனர். 18 எம்எல்ஏக்களை ஏமாற்றியுள்ளனர். சிலீப்பர் செல் இருக்கிறது என்று ஏமாற்றியுள்ளனர். அதிமுக தொண்டர்கள் எல்லோரும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று பொதுமக்களை ஏமாற்றியுள்ளனர்.
சசிகலா வெளியே வந்தால் ஏதாவது மாற்றம் நிகழுமா என்ற கேள்விக்கு, யார் வந்தாலும் வராவிட்டாலும் தினகரன் இந்த கட்சியைவிட்டு வெளியே போகமாட்டார். இவரது டார்கெட் இன்னும் 30 வருஷம். 30 வருஷம் கழித்து இவர் சி.எம்.ஆக வருணும் தமிழ்நாட்டுக்கு. அப்ப ஒரு ஆள் கூட இவர்கூட வரமாட்டாங்க. கட்சி இருக்கும். தொண்டர்கள் வேண்டுமே. நிர்வாகிகள் வேண்டுமே.
தேர்தல் தோல்விக்குப் பிறகு செய்தி தவறை அவர் உணர்ந்ததாக தெரியவில்லை. இன்னும் பெரிய தலைவனாக தன்னை நினைத்துக்கொண்டிருக்கிறார். அது நிச்சயமாக இல்லை. அதிமுகவுக்கு ஒரு மாற்றாக நூறு சதவீதம் தினகரன் இல்லை. அவரது கட்சிக்கு எதிர்காலம் இருக்கிறது என்றால் வேலூர் பாராளுமன்றத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை. போட்டியிட்டால் ஆயிரம் ஓட்டுக்கள்தான் கிடைக்கும். இன்னும் மோசமான நிலைக்குத்தான் அந்த கட்சி போகும். கேட்டால் கட்சியை பதிவு செய்யவில்லை. பதிவு செய்ய பின்னர் நிற்கலாம் என்கிறார்கள். 22 தொகுதி இடைத்தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் கட்சியை பதிவு செய்யாமல்தானே தேர்தலை சந்தித்தீர்கள். இவ்வாறு கூறினார்.