கரூர் தொகுதியில் பிரச்சாரத்திற்கு வந்த அ.தி.மு.க.வேட்பாளர் தம்பிதுரையிடம் குடிநீர் பிரச்சனை பற்றி கேட்ட பொதுமக்களிடம் ஆவேசம் அடைந்த அவர், நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள் எனக்கு கவலை இல்லை என்று எரிச்சலுடன் சொன்ன பதிலால் அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
கரூர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.பி. வேட்பாளரும், தற்போதைய லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை கரூர் தாந்தோணி கிழக்கு, மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட புலியூர், உப்பிடாமங்கலம், பொரணி, ஏமூர், ஏமூர் புதுகாலனி, சுக்காலியூர் ஆகிய ஊர்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது வாக்காளர்களிடம் பேசிய அவர் காங்கிரஸ் தலைவர் ராகுலால் எப்போதும் பிரதமராக முடியாது. இனி இந்தியாவின் நிரந்தர பிரதமர் மோடிதான். ஆகவே கை சின்னத்தில் ஓட்டு போட்டு உங்களின் வாக்குகளை வீணாக்காதீர்கள், மேலும் தமிழக ஆட்சி அதிகாரம் எங்களிடம்தான் உள்ளது. இனி வரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் தொடர வேண்டுமானால் பொது மக்களாகிய நீங்கள் எங்களுக்கு மட்டுமே ஆதரவு அளித்து உங்கள் வாக்குகளை எங்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என பேசினார்.
ஏமூர் புதூர் காலனியில் பேசியபோது குறுக்கிட்ட பொதுமக்கள் முதலில் எங்கள் பகுதியில் நிலவிவரும் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வையுங்கள் என்று கோஷமிட்டனர். உடனே ஆவேசம் அடைந்த தம்பிதுரை ஓட்டு கேட்பது எங்கள் கடமை, ஓட்டு போடுவதும், போடாததும் உங்கள் உரிமை அதனால் நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஒட்டு போடுங்கள் எங்களுக்கு கவலை இல்லை என்று அலட்சியத்துடன் பேசியதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்து கலைந்து சென்றனர்.
தம்பிதுரையின் இப்பேச்சினால் அ.தி.மு.க.நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தி அடைந்து முணுமுணுத்தவாறு சென்றனர். இப்பிரச்சாரத்தில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.கீதா, பி.ஜே.பி.லோக்சபா பொறுப்பாளர் சிவசாமி, பி.ஜே.பி. மாவட்ட தலைவர் முருகானந்தம், தே.மு.தி.க.மாவட்ட தலைவர் தங்கவேல் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.