Skip to main content

தென்காசி வேட்பாளரின் வயது குளறுபடி! சர்ச்சையான பொன்னுத்தாய் விவகாரம்!

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

தேர்தல் ஆணையம் எத்தனை அஜாக்கிரதையாக வேலை பார்க்கிறது என்பதற்கு தென்காசி தொகுதியை உதாரணமாகச் சொல்லலாம். இங்கு திமுக வேட்பாளர் தனுஷ்குமார் உதயசூரியன் சின்னத்திலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் இரட்டை இலைச் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். 

 

ponnuthaai

 

டிடிவி தினகரனின் அ.ம.மு.க சார்பில் போட்டியிடுகிறார் சு.பொன்னுத்தாய். இவருக்குப் பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்தத் தொகுதியில் கோ.பொன்னுத்தாய், ம.பொன்னுத்தாய், ரா.பொன்னுத்தாய் என மேலும் மூன்று பொன்னுத்தாய்கள் களம் இறங்கியிருக்கின்றனர். மின்னனு இயந்திரத்தில் நான்கு பொன்னுத்தாய் பெயர்களும் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. இதில் வில்லங்கம் என்னவென்றால், தினகரனின் அமமுக வேட்பாளருக்கு விழுகின்ற வாக்குகளைச் சிதறடிக்கும் வகையில், அதே பெயரில் உள்ள மூன்று  வேட்பாளர்களைச் சுயேச்சைகளாக சில கட்சிகள் களத்தில் இறக்கியிருப்பதுதான்.

 
மூன்று சுயேச்சை பொன்னுத்தாய்களில், கோ.பொன்னுத்தாய் என்பவர், தனக்கு 24 வயதுதான் ஆகிறது என்று பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். அதைக் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிய தேர்தல் ஆணையம், அவருக்குத் தொலைக்காட்சிப் பெட்டி சின்னம் ஒதுக்கியிருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால், இந்திய அரசியல் சட்டப்பிரிவு 84(பி) படி, 25 வயது பூர்த்தியானவர்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற அடிப்படை விஷயத்தைக்கூட,  தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிந்திருக்கவில்லை.  

 

ponnuthai

 

கோ.பொன்னுத்தாய்,  தான் ஒரு தையல் தொழிலாளி என்றும்,  தனக்கு மின்னஞ்சல் முகவரி இல்லை என்றும்,  பான்கார்டும் இல்லை, சொத்தும் இல்லை என்றும்,  வழக்கு எதுவும்  நிலுவையில் இல்லை என்றும்  வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். கையில் ரொக்கமாக ரூ.5000,  வங்கியில் இருப்பு ரூ.3000,  ரூ.90 ஆயிரம் மதிப்பிலான நகைகள்  என மொத்தம் ரூ.98 ஆயிரத்தை தனது சொத்து மதிப்பாகக் காட்டியிருக்கிறார்.  
 

வேட்புமனுவில் ஒரு புள்ளி விடுபட்டுப் போனால்கூட, அதைக் காரணம் காட்டி நிராகரித்துவிடுவார்கள் தேர்தல் அதிகாரிகள். கோ.பொன்னுத்தாய் விஷயத்திலோ, வயதையே கணக்கில் கொள்ளவில்லை. இது ஏனென்று தெரியவில்லை. அந்த மனுவும், மனுத்தாக்கல் நிறைவு பெறும் நாளான 26-ஆம் தேதி மாலை 3 மணிக்கு அவசரகதியில் வாங்கப்பட்டுள்ளது.

 
கோ.பொன்னுத்தாயிடம்,  வேட்புமனுவில் அவர் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு டயல் செய்து நாம் பேசியபோது, அவருடைய தந்தை இருளப்பன் லைனில் வந்தார்.   “புருஷன்கூட சண்டை போட்டுட்டு வந்து எங்க வீட்ல இருந்துச்சு. இப்ப அவரு  திரும்பவும் வந்து சண்டைபோட்டு எம்மகளைக் கூட்டிட்டுப் போயிட்டாரு. தேர்தல்ல நிக்கிறேன்னு சொல்லி என் நம்பரைக் கொடுத்திருச்சு. நெறய பேர் போன் பண்ணி கேட்கிறாங்க.” என்று சலித்துக்கொண்டார். 
 

பிரமாணப் பத்திரத்தில் முதல் பக்கத்தில் 24 வயது என்று குறிப்பிட்டுள்ளார் கோ.பொன்னுத்தாய். கல்வித்தகுதி விபரத்திலோ, 2010-ல் ப்ளஸ் 2 முடித்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். அதன்படி பார்த்தால், கோ.பொன்னுத்தாய்க்கு வயது 26 ஆகத்தான் இருக்கமுடியும். கோ.பொன்னுத்தாயின் வயது என்னவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். பிரமாணப் பத்திரத்தில் 24 வயது என்று குறிப்பிட்டது தவறுதானே?   வாக்காளர்களைக் குழப்பி, ஆளும் கட்சிக்கு எதிரான மாற்று அணிக்கு (அமமுக) வாக்குகள் விழுவதைத் தடுக்க வேண்டும் என்று ‘யாரோ’ பிறப்பித்த உத்தரவுக்குக் கட்டுப்பட்டே தேர்தல் ஆணையம் செயல்பட்டிருக்கிறது என்பதை கோ.பொன்னுத்தாய் விவகாரம் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்